Published : 12 Jun 2023 11:39 AM
Last Updated : 12 Jun 2023 11:39 AM

தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மணல் குவாரி | கோப்புப் படம்

சென்னை: தென்பெண்ணை ஆற்றில் சட்டபூர்வமாகவும், சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பல இடங்களில் சட்டப்படியாகவும், சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் மிகப்பெரிய அளவில் மணல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மணல் அரிப்பு காரணமாக விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் வாகன போக்குவரத்து பாலம், தொடர்வண்டி போக்குவரத்துப் பாலம் ஆகியவற்றின் தூண் அடித்தளங்கள் கடுமையாக அரிக்கப்பட்டு வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால் பாலங்களின் தூண் அடித்தளங்கள் சேதமடைந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. மணல் குவாரிகள் தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் என்று தெரிந்தும் அவற்றை மூட மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மணல் குவாரிகளில் அதிக அளவாக 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், விதிகளை மீறி தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 30 அடி அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் மணல்மட்டம் குறைந்து பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தென்பெண்ணையாற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் மணல்மட்டம் குறைந்ததன் காரணமாக பாலங்களின் தூண்களுக்கு கீழ் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் மணல்மட்டம் குறைந்ததால் ஆற்று நீர் கால்வாய்களில் பாய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் ஏற்படும் மணல் அரிப்பின் காரணமாக பாலங்களின் அடித்தளம் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும் பிடாகம் பகுதியில் பாலத்தின் தூண்களுக்கு கீழ் கடுமையான மணல் அரிப்பு ஏற்பட்டது. அதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தூண்களின் அடித்தளங்களைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ஆனால், அடுத்த சில வாரங்களில் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் தூண்களுக்கு கீழ் மணலரிப்பு ஏற்படத்தொடங்கியுள்ளது. இது எங்கு போய் முடியும்? என்பது தெரியவில்லை.

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட பாதிப்புகள் போதாது என்று ஏனாதிமங்களம் என்ற இடத்தில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அண்மையில் அனுமதி கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட 25 புதிய மணல் குவாரிகளில் தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்களத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரி தான் மிகவும் பெரியதாகும். அந்த மணல் குவாரியில் மட்டும் ஒரு லட்சம் யூனிட் மணல் அள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 6 மணல் குவாரிகள் அள்ளப்படும் ஒட்டுமொத்த மணலை விட அதிகமாகும். இந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டால் பாலங்களின் அடித்தளத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.

தென்பெண்ணை ஆற்றில் பிடாகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரு பாலங்களின் தூண்கள் மணல்மட்டத்துக்கு கீழே 8 மீட்டர் ஆழத்துக்கு அமைக்கப்பட்டிருப்பதால் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இப்போதே தூண்களைச் சுற்றிலும் 4 மீட்டர் ஆழத்துக்கு மணல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மணல் கொள்ளை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் தூண்களின் அடிப்பகுதி வரை மணல் அரிப்பு ஏற்பட்டுவிடக்கூடும். அதைத் தடுக்க தென்பெண்ணை ஆற்றில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x