Published : 12 Jun 2023 04:07 AM
Last Updated : 12 Jun 2023 04:07 AM

மழை, வெயிலில் இனி சிரமம் இல்லை: சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தால் பயணிகள் மகிழ்ச்சி

சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் பேருந்துகள் வந்து செல்லத் தொடங்கிய நிலையில், பயணிகள் பேருந்து நிலையத்தை மகிழ்ச்சியுடன் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து, நகரப் பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. போதுமான இட வசதி, வெயில் மற்றும் மழைக்காலத்திலும் பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் பழைய பேருந்து நிலைய வளாகமானது, சேலம் மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததையடுத்து, அதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, நகரப் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் சேலம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி, அடிவாரம், குரும்பப்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம், ஆச்சாங்குட்டப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேல் தளத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன், ஓமலூர், சித்தர்கோயில், முத்து நாயக்கன்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக, தரைத்தளத்தில் இருந்து பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. தரைத்தளத்தில் போதுமான இட வசதி இருப்பதால், பேருந்துகள் நெருக்கடியின்றி வந்து செல்கின்றன. பயணிகளும் கூட்ட நெரிசலின்றி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். மேல் தளத்தில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்துக்கு பயணிகள் எளிதில் சென்று வர, லிஃப்ட் மற்றும் மாடிப்படி வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரடுக்கு பேருந்து நிலையத்தை பயணிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்து, புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ஈரடுக்கு பேருந்து நிலையம் குறித்து பயணிகள் கூறியது: பேருந்து நிலையத்தின் மேல் தளத்திலும் பேருந்து நிறுத்துமிடம் இருப்பதால், தரைத் தளம் எப்போதும் வெயிலின் தாக்கமின்றி, மழை பெய்தாலும் பயணிகளுக்கு பாதிப்பின்றி வசதியாக இருக்கும். தரைத் தளம் மற்றும் மேல் தளம் ஆகியவை முற்றிலும் கான் கிரீட் தளமாக இருப்பதால், மழைக் காலத்தில் மழைநீர் தேங்கி, சகதியில் நடக்க வேண்டிய சிரமம் இருக்காது.

பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், அதில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை முறையாகவும், மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தால், பயணிகள் எப்போதும் மன நிறைவாக பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x