Published : 12 Jun 2023 04:13 AM
Last Updated : 12 Jun 2023 04:13 AM
திருச்சி: திமுக, பாஜகவிடம் மக்களுக்கான சேவை அரசியல் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதி வரை செல்லவில்லை என்ற பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்த மாநிலங்களிடம் தண்ணீருக்காக கையேந்தும் நிலைஇருக்கும் வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து அரசு சொத்துகளையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததைத் தவிர, வேறு எந்தசாதனையும் செய்யவில்லை. எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் போதே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்தது போல, முதல்வர் ஸ்டாலின் இருக்கும் போதே, உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார். திமுக மற்றும் பாஜகவிடம் மக்களுக்கான சேவை அரசியல், செயல் அரசியல் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே உள்ளது. செப்டம்பரில் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க உள்ள நிலையில், அதை தற்போதிலிருந்து திமுக அரசு விளம்பரம் செய்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களுக்கு பட்டம் அளிப்பதில் கவனம் செலுத்தாமல், மாநிலங்களுக்கு உரிமை இல்லை, அதிகாரம் இல்லை என்று ஆளுநர் பேசிக்கொண்டிருக்கிறார். முஸ்லிம் சிறைக் கைதிகளையும், சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்யமாட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT