Published : 11 Jun 2023 09:42 AM
Last Updated : 11 Jun 2023 09:42 AM

குடியரசு தலைவரை சந்திக்க நீலகிரியில் இருந்து பழங்குடியின மக்கள் டெல்லி பயணம்

உதகை: நீலகிரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து குடியரசு தலைவரை சந்திக்க பழங்குடியின மக்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவராக தற்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு உள்ளார். இவர் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்தாண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார். பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், முதல் முறையாக நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதால் நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியின குழு சார்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி முதல் முறையாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, 19-ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்து போர் நினைவுச் சின்னத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 6 பண்டைய பழங்குடியின மக்கள், அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவியதாலும், ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருந்ததாலும் பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர் கோவையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்று விட்டார். குடியரசுத் தலைவரை சந்திக்க முடியாததால் பழங்குடியின மக்கள் வருத்தம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் சார்பில், குடியரசுத் தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து பண்டைய பழங்குடியின தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பகுமார் ஆகியோர் குடியரசுத் தலைவர் அலுவலகத்தை கடிதம் மூலம் தொடர்பு கொண்டனர். இதைத் தொடர்ந்து நாளை (ஜூன் 12) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோத்தர், தோடர், இருளர், குறும்பர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 57 பேர் பேருந்து மூலம் உதகையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர். இவர்கள் நாளை குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இவர்களுடன் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளான கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இருளர் இனத்தைச் சேர்ந்த 20 பேர் இணைந்துள்ளனர். அவர்களும் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கின்றனர். இதற்கான முழு செலவையும் சென்னை பழங்குடியினர் இயக்குநரகம் ஏற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 75 வகையான பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 1500 பேர் ஒரே நாளில் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பண்டைய பழங்குடியின மக்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கும் போது இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மூங்கிலால் செய்த கைவினைப் பொருட்களையும், குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பிரத்யேக ஓவியங்களையும், தோடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எம்ராய்டரி துணிகளையும், கோத்தர் இன மக்கள் பாரம்பரிய சால்வையையும் பரிசாக வழங்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x