Published : 28 Oct 2017 12:34 PM
Last Updated : 28 Oct 2017 12:34 PM

என்னை மிரட்டுகிறார் காப்பாற்றுங்கள்; ஜெ.தீபாவின் கணவர் மாதவன் போலீஸில் புகார்: ஓட்டுநர் ராஜா மீது வழக்குப்பதிவு

தன்னை மிரட்டி தாக்க முயல்வதால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அளித்த புகாரின் பேரில் தீபாவின் கார் ஓட்டுநர் ராஜா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென உதயமாகி பரபரப்பாக பேசப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டார். தனக்கென கட்சி ஒன்றையும் பேரவை ஒன்றையும் உருவாக்கினார்.

இவருக்கு துணையாக இவரது கணவர் மாதவன், ஓட்டுநர் ராஜா ஆகியோர் முக்கிய நிர்வாகிகள் ஆக்கப்பட்டனர். பின்னர் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் மாதவன் தனி அணியாக இயங்கினார். அவர் ஒரு கட்சி ஆரம்பித்தார். பின்னர் தீபாவுடன் இணைவதாக அறிவித்தார்.

போயஸ் கார்டனை தீபா கைப்பற்ற சென்றபோது அவருடன் திடீரென மாதவன் தோன்றினார். இதனால் பொதுவெளியில் மாதவனை ஓட்டுநர் ராஜா கண்டபடி திட்டினார். மாதவனை விரட்டும்படி தீபாவிடம் ராஜா சொன்னார். தீபா ராஜாவை சமாதானப்படுத்தினார்.

இதனிடையே தீபாவும் மாதவனும் அரசியல் ரீதியாக மீண்டும் இணைந்ததாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று திடீரென மாதவன் மாம்பலம் காவல நிலையத்தில் புகார் ஒன்றை ஓட்டுநர் ராஜா மீது அளித்தார்.

அந்தப் புகாரில் தனது மனைவியின் சகோதரரின் நண்பர் ராஜா தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ராஜா, தங்கள் வீட்டில் உள்ள ஊழியர்களை தாக்கியதாகவும், தான் வீட்டிலேயே தங்க முடியாத அளவுக்கு தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறியிருந்தார்.

மேலும், ராஜாவால் தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் தன்னை மிரட்டி வரும் ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கேட்டிருந்தார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தீபா தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. புகாரைப் பெற்ற போலீஸார் மாதவன் அளித்த புகாரின் பேரில் ராஜா மீது பிரிவு 323 மற்றும் 506(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x