Published : 25 Oct 2017 05:19 PM
Last Updated : 25 Oct 2017 05:19 PM

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டறை: சென்னை மாநகராட்சி தகவல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டறை இயங்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை மாநகராட்சியில் வரும் வரும் 26-ம் தேதி முதல் முதல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து குறைந்தபட்சம் 75 பணியாளர்கள் பணியாற்றும் வகையில் 24 / 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-2536 7823, 2538 4965, 2538 3694 25619206 மூலமும் வாட்ஸ் அப் எண்கள் 94454-77662 மற்றும் 94454-77205 மூலமும் தெரிவிக்கலாம்.

இக்கட்டுப்பாட்டு அறையில் பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்லாது, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, சென்னை குடிநீர் வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியம், ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் இடம் பெறுவார்கள்.

பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் வசமுள்ள 1096 வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பினை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 1894 கி.மீ. நீளத்தில் 7351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை தூர்வாரப்படுகிறது. தற்பொழுது, 1204 கி.மீ. நீளத்திற்கு ரூ.10.31 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பழுதடைந்த மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.7.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 376 கி.மீ. நீளத்திற்கு கட்டுப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய்களில் 299 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14,257 வீடுகளில் 825 வீடுகளும், அடையாறு ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 9,687 வீடுகளில் 4,134 வீடுகளும் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆம்பிபியன் இயந்திரத்தின் மூலம் பக்கிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கொடுங்கையூர் கேப்டன் காட்டன் மற்றும் பி கேனால் கால்வாய் பகுதிகளில் 4388.33 மெட்ரிக் டன் தூர் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் சிறிய கால்வாய்களில் ரோபொடிக் இயந்திரம் மூலம் கடந்த 6 மாதங்களில் 20 கால்வாய்களிலிருந்து 5753.95 மெட்ரிக் டன் தூர் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது.

மழைநீர் எளிதாக வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர்அழுத்த டீசல் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 அல்லது 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டர் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, தடையில்லா போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2 வாகனம் மூலம் மரம் அறுக்கும் இயந்திரங்கள், 160 கையில் எடுத்துச் செல்லக்கூடிய டீசல்/பெட்ரோலினால் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின் அறுவை இயந்திரங்கள் போன்றவைகளை மண்டலஅலுவலகங்களில் இருப்பு வைத்து மழைக்காலங்களில் மரங்கள் சாலைகளில் விழும் பொழுது உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 18 உயர்கோபுர மின்விளக்குகளை தயார்நிலையில் வைத்திடவும், 138 நகர ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்திடவும், மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்திட 3337 மலேரியா பணியாளர்கள் மூலம் கொசுஒழிப்பு பணி மேற்கொள்ள 420 கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான்கள், 245 கையினால் புகை பரப்பும் இயந்திரங்கள், 41 வாகனம் மூலம் புகை பரப்பும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்புப் படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு உணவு தயாரித்திட 4 பொது சமையல் கூடங்களும், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக்காலங்களில் பாதுகாப்பான தரமான குடிநீரை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x