Published : 09 Oct 2017 02:47 PM
Last Updated : 09 Oct 2017 02:47 PM

டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை: வாசன்

டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கெடுத்து அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, உயிரிழப்பும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த மிக முக்கியப் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு போதுமானதாக இல்லை. கடந்த 10 நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பாதவும் மற்றும் நாள் தோறும் மாநிலம் முழுவதும் சுமார் 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுவரை 85 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டெங்கு நோயினால் உயிரிழந்திருந்தாலும் அவர்களின் இறப்புக்கு டெங்கு காய்ச்சல் காரணமில்லை என்று சான்றிதழ் கொடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு டெங்குவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக, முறையாக கணக்கெடுத்து அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும்.

மேலும் டெங்குவை குணப்படுத்த, கட்டுப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது அதனை முழுமையாக, முறையாக பயன்படுத்தி நோயின் பிடியிருந்து புறநோயாளிகளை பாதுகாப்பதோடு, அந்நோய் மேலும் பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் டெங்குவையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதால், இந்நோய்க்கு உரிய மருத்துவச்சேவையை தற்போதைய அவசர நிலையை உணர்ந்து அனைத்து மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தை டெங்குக்கு சரியாக பயன்படுத்திட வேண்டும்.

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் புறநோயாளிகள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையும், அவசர சிகிச்சையும் தொடர்ந்து அளித்திட வேண்டும். மேலும் இந்நோய் பரவாமல் இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு டெங்குவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்களும் தாங்கள் வசிக்கின்ற வீடு மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள தங்களால் முடிந்த அளவிற்கு பணிகளை மேற்கொள்ளலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு நம் நாட்டில் டெங்குவை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து அதற்குண்டான பணிகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம், தமாகாவினர், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக நல ஆர்வலர்கள், பொது நல சங்கங்கள் எல்லாம் இணைந்தோ அல்லது அவரவர்கள் தனிப்பட்ட வழியிலோ சுகாதாரமில்லா பகுதிகளை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள சேவை உள்ளத்தோடு பணிகளில் ஈடுபடலாம். வெளிநாடுகளில் மருத்துவச் சேவைக்கு பயன்படுத்தும் நவீன யுக்திகளை கையாளலாம்.

மொத்தத்தில் டெங்கு உள்பட வேறு எந்த நோயாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், முழுமையாக குணப்படுத்தவும், உயிரிழப்பை தடுக்கவும் 24 மணி நேர தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியமும், அவசரமும் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்டு'' என்று வாசன் கூறியுள்ளார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x