

சென்னை: சென்னையில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையை ‘கார்பன் உமிழ்வு இல்லாத சாலை’யாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபாதை வளாகங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி 5 மண்டலத்தில் 51 வது வார்டில் உள்ள எம்சி சாலை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 111 வார்டில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை ஆகிய 2 சாலைகளில் நடைபாதை வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, காதர் நவாஸ்கான் சாலையை கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், வணிக வளாகங்கள் என்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் சென்னைவாசிகளின் கொண்டாட்ட தளமாகவும் இந்த சாலை மாறி வருகிறது.
எனவே, இந்த சாலையை வெளிநாடுகளில் உள்ளதை போல் சர்வதேச தரத்திலான சாலையாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. சாலையின் முன்பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு, கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாகவும் மாற்றப்பட உள்ளது.
புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சாலைகளில் இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும் வகையிலும் இந்த சாலை மாற்றி அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் முடிந்து, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது" என்று அவர்கள் கூறினர்.