Published : 09 Jun 2023 06:32 AM
Last Updated : 09 Jun 2023 06:32 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று - 1,000 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் சூறைக் காற்றுக்கு சேதம் அடைந்த வாழைத்தோப்பு.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு சுமார் 1,000 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, வாணக்கன்காடு, பெரியவாடி, புள்ளான்விடுதி, கறம்பக்குடி, மறமடக்கி, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,000 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தன.

மேலும், பலா, தென்னை போன்ற மரங்களும் முறிந்தன. 200 ஏக்கரில் சோளம், 100 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பது வேளாண் துறை அலுவலர்களின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மின் கம்பிகளின் மீது மரங்கள் சாய்ந்ததில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் வாழை, நெல், சோளம், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக சூறைக்காற்றால் ஏற்படும் சேதத்துக்கு அரசு இழப்பீடு தருவதில்லை. எனவே, இம்முறை பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றார்.

இந்நிலையில், புள்ளான்விடுதி, வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி, சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் பயிர் சேதம் குறித்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று இழப்பீடு தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x