Last Updated : 08 Jun, 2023 06:28 AM

 

Published : 08 Jun 2023 06:28 AM
Last Updated : 08 Jun 2023 06:28 AM

கேரள மின்வாரிய அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் திறக்கப்படுவதை பார்வையிட்ட கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி.

பொள்ளாச்சி: ஆழியாறு அணையைப் பார்வையிட்ட கேரள மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டியின் வேண்டுகோளின் பேரில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஆழியாறு அணையிலிருந்து தமிழக அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர்.

கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஆண்டின் 11 மாதங்கள் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். கேரளாவுக்கு வழங்கும் நீர் அளவு மணக்கடவு பகுதியில் அளவீடு செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆழியாறு ஆற்றில் பள்ளிவிளங்கால் தடுப்பணையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளா மாநில மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நேற்று ஆழியாறு அணைக்கு வந்தார். அணையைப் பார்வையிட்ட அமைச்சர், தமிழக அதிகாரிகளிடம் கேரளாவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தெரிவித்தார். ஒப்பந்தப்படி குடிநீருக்காக கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

7 கிராமங்களில் குடிநீர் பஞ்சம்: இதுகுறித்து கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறும்போது, ‘‘கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவுகிறது. இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன. சித்தூர் தாலுகாவில் உள்ள குன்னங்காட்டுப்பதி உள்ளிட்ட 7 கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறையால் 8 கி.மீ நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தேவைக்காக கேரளாவுக்கு ஆழியாறு அணையிலிருந்து 400 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என நேரில் வந்து வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.

தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உயரதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கேரளாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் தர உறுதி அளித்தனர். இதையடுத்து உடனடியாக அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கேரள மக்களின் குடிநீர் தேவையை போக்க உடனடியாக தண்ணீர் திறந்து விட்ட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x