Published : 08 Jun 2023 06:24 AM
Last Updated : 08 Jun 2023 06:24 AM
சென்னை: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள மலக்குழிகளை சுத்தம் செய்ய உதவும் ‘ஹோமொ செப்’ என்றகருவியை தமிழக அரசு உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தி செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி சார்பில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகளில் துப்புரவுப் பொறியியல் துறைகளை உருவாக்க வலியுறுத்தி மனித மாண்பு நிகழ்வு என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் அமைப்பின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கூறும்போது, “மின்விபத்துகளை தடுக்க மலிவு விலையில் டெஸ்டர் போன்ற கருவிகள் உள்ளன. ஆனால், மலக்குழியில் விஷவாயு உள்ளதா என்பதை பரிசோதிக்க உதவும் கருவி உலகில் உள்ள சாதாரண நாடுகளில் கூட கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அத்தகையடெஸ்டர்கள் பயன்படுத்தப்படவில்லை.
மலேசியா, சிங்கப்பூர் போன்றசிறிய நாடுகளில் கூட கட்டிடங்களை கட்டும்போது அதில் எவ்வளவு பேர் வசிப்பார்கள், எவ்வளவுகழிவு சேரும், அவை எவ்வாறு வெளியேற்றப்படும் என்ற விவரங்களை தெரிவித்த பிறகுதான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.
ஆனால், நம் நாட்டில் பிரம்மாண்ட கட்டிடங்களில் கூட கழிவுகளை வெளியேற்ற சில ஆயிரங்களை கூட செலவு செய்ய கட்டிட உரிமையாளர்களுக்கு மனமில்லை. நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும்.
நாட்டில் நிகழும் விஷவாயு மரணங்களில் தமிழகத்தில் தான்20 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் உடனடியாக துப்புரவு பொறியியல் உருவாக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி பேசியதாவது: சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள மலக்குழிகளை சுத்தம் செய்ய உதவும் ‘ஹோமொ செப்’ என்ற கருவியை தமிழக அரசு உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கும் நிலையைத் தடுக்க வேண்டும்.
அதற்கு ஒரு செயல் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு ஐஐடிநிபுணர்கள், பொறியியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த இந்த நவீன சமூகத்தில், இன்னமும் மலக்குழிக்குள் மனிதனை இறக்குவது என்ற அவலம் நிலவி வருகிறது. எனவே, இதைத் தடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரவ தலைவரான முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைசிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திரைப்பட இயக்குநர் தீபக் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில், ‘ஹோமொ செப்’ கருவி காட்சிப்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT