Last Updated : 07 Jun, 2023 06:22 AM

 

Published : 07 Jun 2023 06:22 AM
Last Updated : 07 Jun 2023 06:22 AM

மாதனூரில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான கட்டிடம் காவல் நிலையம் போல் வர்ணம் பூசப்பட்டு புறக்காவல் நிலையமாக மாற்ற தயார் நிலையில் உள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது. மாதனூர் ஊராட்சியையொட்டி, பாலூர், திருமலைக்குப்பம், தோட்டாளம், குளிதிகை, வெங்கிளி, கீழ்முருங்கை, வடபுதுப்பட்டு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வேலூர் - திருப்பத்தூர் என இரண்டு மாவட்ட எல்லையில் மாதனூர் ஒன்றியம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் உள்ளதால் இங்கு அடிக்கடி சாலை விபத்துக்களும், அதன் மூலம் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாதனூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிக்கு ஒரு நெடுஞ்சாலையும், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒடுக்கத்தூர் பகுதிக்கு செல்ல ஒரு நெடுஞ்சாலையும் உள்ளது.

வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் நகரம் மற்றும் பல்வேறு ஊரகப் பகுதிகளில் இருந்து தினசரி மாதனூருக்கு வந்து, இங்கிருந்து தான் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

அதேபோல, ஒடுக்கத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாதனூர் வரும் தொழிலாளர்களும் இதேபோல் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி வேலூரில் இருந்து வரும் அரசு ஊழியர்களும் மாதனூர் வந்து இங்கிருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் சென்று வருகின்றனர்.

இதனால் மாதனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது விபத்துக்களும், பல்வேறு சமூக விரோத குற்றச்செயல்களும் நடந்த வண்ணம் உள்ளன. மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தை யொட்டியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தற்போது ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது.

மாதனூர், பாலூர், திருமலைக்குப்பம் ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், விசாரணைக்கு வந்து போவதால் அலைச்சலுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள மாதனூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பால கிருஷ்ணன் இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை களை மேற்கொண்டார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டிடம் ஒன்றை புறக்காவல் நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அந்த கட்டிடத்துக்கு வர்ணம் பூசும் பணிகளை அப்பகுதி மக்களே செய்து கொடுத்தனர்.

குற்றச்சம்பவம் குறையும்... புறக்காவல் நிலையத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள் உள்ளிட்டவையும் பொதுமக்கள் தாமாக முன்வந்து வாங்கி கொடுக்க தயாராக இருந்தனர். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அப்பணிகள் பாதியிலேயே நின்றன.

இரு மாவட்ட எல்லையில் உள்ள இந்த மாதனூரில் புறக் காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். அவ்வாறு அமைத் தால் இந்த பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் குறையவும், புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மாதனூரில் புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்கெனவே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கான பதில் வரவில்லை. இருப்பினும் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். வேலூர் மாவட்டத்தில், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் காவல் நிலையம், அணைக்கட்டு காவல் உட்கோட்டம் (சப் டிவிஷன்) அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட தொலைவு பயணித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையம் சென்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி மாதனூர் பகுதியில் விரைவில் ‘புறக் காவல் நிலையம்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x