

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி: தமிழக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் மறைமுக விமர்சனங்கள் குறித்து பதில் தந்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழக ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். இது அவருடைய அண்மைக்கால பேச்சுகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டி, அங்கு அவருடைய அரசியலை ஆளுநர் பேசியிருக்கிறார். குறிப்பாக, தமிழகத்தில் கல்விச் சூழ்நிலை சரியில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதைப் போலவும் பேசியிருக்கிறார். அதேபோல், தொழில் முதலீடுகள் ஒரு நாட்டுக்கு வருவது என்பது, ஏதோ தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணங்கள் மூலமாகவோ அல்லது தொழில் முதலீடு குறித்து பேசுவதால் மட்டுமே வந்துவிடாது என்று கூறியிருக்கிறார்.
அண்மையில், தமிழக முதல்வர் மேற்கொண்ட பயணத்தைச் சுட்டிக்காட்டி மறைமுகமாக ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரை, 108 நிறுவனங்கள், 1 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து, அதில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதை ஆளுநருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார். 2011-ல் சீனாவுக்கு பயணம் செய்தார், சீனாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அங்கிருக்கக் கூடிய சீன தொழிலதிபர்களுடன் அவர் உரையாடினார். எங்களை நோக்கி ஆளுநர் வீசியிருக்கும் அம்பை, பிரதமரை நோக்கி ஆளுநர் எய்திருப்பதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். எனவே, குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடி மேற்கொண்ட இதுபோன்ற பயணங்களைத்தான் ஆளுநர் இப்போது சுட்டுகாட்டியிருக்கிறோரோ என்ற சந்தேகம் வருகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதனிடையே, "முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது" என திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பேரவை நேரலை: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2015-ம் ஆண்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து, தோட்டக் கலை துறைக்குச் சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி நீக்க வேண்டும்: இபிஎஸ்: தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனைக்கு துணை போகும் அமைச்சர் செஞ்சி மஸ்தானை, பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரில், ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மின் வாரியம் கைவிட வேண்டும் என்று நுகர்வோர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோருவது சரியல்ல’: "ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் எடுத்தார். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே, அவர் பதவி விலக வேண்டும் என கோருவது புத்திசாலித்தனமானதோ, சரியானதோ அல்ல" என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
‘செய்தி பரபரப்புக்காகவே சிபிஐ விசாரணை’ - காங். விமர்சனம்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது தலைப்புச் செய்தி பரபரப்புக்காவும், காலக்கெடுவை நீட்டிப்பதற்காகவும் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் உயிரிழப்பு: மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கங்சுப் என்ற இடத்தில் திங்கள்கிழமை ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, மணிப்பூர் மாநிலம் செரோ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், கலகக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அசாம் ரைஃபிள் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா பட்டத்தை வெல்ல வாய்ப்பு - நாசர் ஹுசைன் கணிப்பு: இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புதன்கிழமை லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரான வெங்கடேஷ், எருமை மாடுகளை கொல்லலாம் என்றால், பசுக்களை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் களத்துக்கு பசுக்களை அழைத்து வந்து அவற்றிக்கு மரியாதை செய்தனர்.