ஒடிசா  ரயில் விபத்து | செய்தி பரபரப்புக்காகவே சிபிஐ விசாரணை - காங்கிரஸ் விமர்சனம்

ஜெய்ராம் ரமேஷ்  | கோப்புப்படம்
ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது, செய்தி பரபரப்பிற்காகவும், காலக்கெடுவை நீட்டிப்பதற்காகவுமே என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், "பாலசோர் ரயில் விபத்து குறித்து ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தலைப்புச் செய்தி பரபரப்புக்காவும், காலக்கெடுவை நீட்டிப்பதற்காகவும் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலவரிசையை கொஞ்சம் நினைவு கூறுங்கள் என்று சுமார் 150 பேர் உயிரிழந்த கான்பூர் ரயில் விபத்து விசாரணை குறித்து பட்டியிலிட்டுள்ளார்.

அந்த காலவரிசையில் அவர்,">நவம்பர் 20, 2016: இந்தூர் - பாட்னா விரைவு வண்டி கான்பூரில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர்.

> ஜனவரி23, 2017: அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த விபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பிரிந்துரைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.

> பிப்ரவரி 24,2017: கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச்செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டார்.

> அக்டோபர் 21, 2018: தேசிய புலனாய்வு முகமை கான்பூர் ரயில் விபத்து தொடர்பாக எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யாது என்று பத்திரிகைகள் தெரிவித்தன.

> ஜூன் 6, 2023: இன்றுவரை கான்பூர் ரயில் விபத்து குறித்த தேசிய புலனாய்வு முகமை விசாரணையின் இறுதி அறிக்கை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இதனிடையே, இந்த ரயில் விபத்திற்கு பின்னால் சதியிருப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் அம்மாநிலத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த கோர விபத்திற்கு பின்னால் மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸின் சதியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ நேரில் விசாரணை: பாலசோர் ரயில் விபத்து குறித்த விசாரணையை சிபிஐ செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு பாலோரில் விபத்து நடந்த பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலையில் சென்று விசாரணையைத் தொடங்கினர். முன்னதாக, விபத்து குறித்து, "அலட்சியத்தால் மரணம் ஏற்பட காரணமாய் இருத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழங்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் இந்த கோர ரயில் விபத்திற்கு சிக்னல் கோளாறே காரணம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விபத்திற்கான காரணங்களை கண்டுபிடிப்பதில் சிபிஐ விசாரணை கவனம் செலுத்தும்; இயந்திர தவறு, மனித தவறு, நாசவேலை போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலி எண்ணிக்கை உயர்வு: இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் நேற்று வரை 275 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in