முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் இழிவுபடுத்தியுள்ளார் - வைகோ கண்டனம்

வைகோ | கோப்புப் படம்
வைகோ | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்திற்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழகத்திலும் நடக்கும்" என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in