ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோருவது புத்திசாலித்தனம் அல்ல: தேவகவுடா கருத்து

ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோருவது புத்திசாலித்தனம் அல்ல: தேவகவுடா கருத்து
Updated on
1 min read

பெங்களூரு: ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கோருவது புத்திசாலித்தனமானது அல்ல என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் எடுத்தார். தொடர்ந்து 55 மணி நேரம் அவர் சோர்வின்றி பணியாற்றி இருக்கிறார். நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிபிஐ விசாரணை என்பது வேறானது. அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன். இது விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சில கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்.

விபத்து நடந்த அன்று நள்ளிரவு ட்விட்டரில் நான் ஒரு பதிவு போட்டேன். அதில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இந்த விவகாரத்தில் எனது கட்சி அரசியல் ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்காது. முதலில் விசாரணை முடிவடையட்டும். ரயில்வே அமைச்சர் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். தற்போதைய நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என கோருவது புத்திசாலித்தனமானதோ, சரியானதோ அல்ல.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். இவ்விஷயத்தில் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு எங்கள் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தேவகவுடா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in