Published : 06 Jun 2023 06:36 AM
Last Updated : 06 Jun 2023 06:36 AM

பெரம்பலூர் | அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - மீட்பு பணிக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்து மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 4 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் மீட்பு பணிக்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், தனது உறவினர்களுடன் வேனில் திருவண்ணாமலை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் திண்டுக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த தண்ணீர்பந்தல் அருகே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது வேன் மோதியது. இதில், சென்டர் மீடியனில் வேன் ஏறி நின்றது. டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரை ஓட்டிவந்த ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சாமிதாஸ், அருகே அமர்ந்திருந்த சேகர் ஆகியோர் காயமடைந்தனர்.

விரைந்து வந்த108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்த இடத்தில், சென்டர் மீடியனில் ஏறி எதிர் திசையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான பெரம்பலூர் மாவட்டம் அரணாரையைச் சேர்ந்த ராஜேந்திரன்(45), வேன் பயணிகளான திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த குப்புசாமி(60), இவரது பேத்தி கவிப்பிரியா(22) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில், கவிப்பிரியாவுக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

மேலும், இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரம்பலூர் போலீஸார், ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுடலை(42), வேன் ஓட்டுநர் செல்வராஜ்(55) ஆகியோரை கைது செய்தனர்.

முதல்வர் ரூ.2 லட்சம் நிதி: விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x