Last Updated : 06 Jun, 2023 06:05 AM

 

Published : 06 Jun 2023 06:05 AM
Last Updated : 06 Jun 2023 06:05 AM

புதுக்கோட்டை | மீன்பிடி இறங்கு தளங்கள் மேம்படுத்தப்படாததால் மீனவர்கள் கடும் பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மேம்படுத்தப்படாததால், விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கடும் இன்னலை அனுபவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களும், புதுக்குடி, பொன்னகரம், அம்மாபட்டினம், புதுப்பட்டினம், கட்டுமாவடி, முத்துக்குடா உள்ளிட்ட 42 நாட்டுப்படகு மீன்பிடி தளங்களும் உள்ளன.

இரு விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதேபோன்று, நாட்டுப்படகு மீன்பிடி தளங்களில் இருந்து 2 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இரவு பகல் பாராமல், கடலில் படகோட்டிச் சென்று பலவிதமான மீன், நண்டுகளைப் பிடித்து வந்து உள்ளூர், பிற மாவட்டங்களில் விற்பனைக்கு அனுப்புவதுடன். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் படும்பாட்டைவிட, கடற்கரையில் கடும் இன்னல்களை சந்திப்பதாக கூறுகின்றனர்.

படகுகளை நிறுத்துவதில் சிரமம்: இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் கூறியது:

நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்கள் அனைத்தும் தூர்ந்து, சேறும் சகதியுமாக காணப்படுவதால், படகுகளை கரைக்கு கொண்டுவர முடிவதில்லை. கடலுக்கு செல்லும்போது வலைகள், டீசல் கேன்கள், ஐஸ் பெட்டி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து மிகுந்த சிரமத்துடன் கடலுக்குள் நெடுந்தூரம் நடையாய் நடந்து படகுகளை அடைய வேண்டியுள்ளது. அதேபோன்று, கரையோரத்தில் தூர்வாரப்படாமல் போதிய ஆழமின்றி மண் திட்டுகளாக இருப்பதால் படகுகளை நிறுத்துவதிலும், இயக்குவதிலும் சிரமமாக உள்ளது.

மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பும்போதும் அதே நிலைதான். விசைப்படகு மீன்பிடி தளங்களிலும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தடுப்புச் சுவர்கள் அரிக்கப்பட்டு உள்ளன. மண் அரிப்பை சரி செய்ய வேண்டும். உலர்களம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குடிநீர், தெருவிளக்கு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். முத்துக்குடா போன்ற பல்வேறு நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் கீற்றுக் கொட்டகைகளும், சீமைக்கருவேல மரங்களின் நிழலும்தான் வலைகள் உலர்த்தும் இடங்களாக உள்ளன. எனவே, விசைப்படகு, நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் மீன்வளத் துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x