Last Updated : 05 Jun, 2023 06:07 PM

 

Published : 05 Jun 2023 06:07 PM
Last Updated : 05 Jun 2023 06:07 PM

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறுகள் நடந்திருந்தால் விசாரணை: ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரி: “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறுகள் நடந்திருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும். தவறுகள் மறைக்கப்படாது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ராஜ் நிவாஸ் தோட்டத்தில் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்கள் தொடர்பாக எம்எல்ஏ உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது தொடர்பாக கேட்டதற்கு, "அனைத்தும் நேர்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எனது கருத்து. ஒப்பந்தப் புள்ளிகளும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறார்கள். தலைமைச் செயலர் இதற்கான வழிமுறைகளை நேர்மையாக நடத்தி வருகிறார். முன்பு, ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக அவற்றை விரைபடுத்த கூறி வருகிறேன்.

கடந்த ஆட்சியில் பலமுறை ஒப்பந்தபுள்ளி மறுக்கப்பட்டு தாமதப்படுத்தப்பட்டது. இந்த நேரத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் முடிக்கப்படாமல் இருந்தது. அவற்றை விரைவுப்படுத்துவதற்காக தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்தும் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மை நிதி இந்த ஜூன் மாதத்தோடு முடிவடைய இருந்தது. அதனால், நமக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் நின்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு வேண்டும், புதுச்சேரி பலனடைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் யாரும் அவநம்பிக்கையோடு இருக்கக் கூடாது. தவறுகள் நடைபெற்றிருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும். தவறுகள் நடந்திருந்தால் மறைக்கப்படாது. தாமதப்படுத்தப்பட்டவை எல்லாம் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுத்த வேண்டிய சூழலில் இருந்தவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் நேர்மறையான வளர்ச்சிகள். தவறுகள் நடைபெறுவது தெரிந்தால் அதற்கான விசாரணை அமைப்பதில் எவ்வித தயக்கவும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x