Last Updated : 05 Jun, 2023 03:47 PM

 

Published : 05 Jun 2023 03:47 PM
Last Updated : 05 Jun 2023 03:47 PM

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார்: பூட்டிய கதவில் ஏறி குதித்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ

பூட்டிய கதவை ஏறி குதித்த புதுச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான நேரு புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டார். அங்கு தலைமைச் செயலர் இல்லாததால் அரசு விழாவில் இருப்பதை அறிந்து, அங்கு சுயேட்சை எம்எல்ஏ வந்தபோது வாயிற்கதவு மூடப்பட்டது. மூடியிருந்த வாயிற் கதவில் ஏறி குதித்த எம்எல்ஏ, முதல்வர் முன்பாக கோஷம் எழுப்பி அடுக்கடுக்காக தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் தலைமைச் செயலரின் கீழ் செயல்படுவதால் தனக்கு முழுவிவரங்கள் தெரிவதில்லை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். காலக்கெடு முடிவடைந்தும் பணிகள் முடியாததால் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவித்து தலைமைச்செயலகத்தை முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு இன்று காலை முற்றுகையிட்டார். அவருடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு. அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைமைச் செயலரை சந்திக்க வேண்டும் என தெரிவித்து தலைமைச் செயலக வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். தலைமைச் செயலர் அரசு விழாவுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சுற்றுச்சூழல் விழா நடந்த கம்பன் கலையரங்கத்துக்கு வந்தார். சுயேட்சை எம்எல்ஏ வரும் தகவலை அறிந்த போலீஸார் கம்பன் கலையரங்கின் இரு வாயிற் கதவுகளையும் மூடினர். நேரு எம்எல்ஏ அங்கு வந்து திறக்கக் கூறினார். ஆனால் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த எம்எல்ஏ நேரு, வாயிற் கதவில் ஏறி உள்ளே குதித்தார். அவரது ஆதரவாளர்களும் அவரை பின்பற்றி வந்தனர்.

விழா நடக்கும் அரங்க மேடையின் கீழே எம்எல்ஏ நேரு மற்றும் ஆதரவாளர்கள் நின்றனர். விழா மேடையில் முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமர்ந்திருக்க பேரவைத் தலைவர் செல்வம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தலைமைச் செயலரை பார்த்தப்படி எம்எல்ஏ நேரு, "புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னானது? நகர் பகுதிகள் குப்பையாக கிடக்கிறது. உப்பனாறு வாய்க்கால் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.

இதுவரை ஸ்மார்சிட்டி திட்டத்தில் என்ன பணி செய்தீர்கள்? மக்களின் வரிபணத்தில் ஊதியத்தை வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் தலைமைச் செயலர் இந்த ஊரில் இருக்கக் கூடாது. அவர் உடன் வெளியேற விட்டால் தொடர்ந்து போராடுவோம்" என்றார். தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து, "முதல்வர் இருப்பதால், மரியாதைக்காக வெளியே செல்கிறேன்" என்று நேரு எம்எல்ஏ புறப்பட்டார். இச்சம்பவத்தின்போது மேடையில் இருந்த முதல்வர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் அமைதி காத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x