Published : 05 Jun 2023 08:42 AM
Last Updated : 05 Jun 2023 08:42 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைக்கிறார்.
‘உயர் கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 5) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டை, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் பல்கலைக் கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் துணை வேந்தர்களிடம் கலந்துரையாடுகிறார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலோக் குமார் ராய், இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் துணை வேந்தர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
மாநாட்டுக்காக உதகை ராஜ்பவனில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் உதகை வந்தார். வரும் 9-ம் தேதி வரை உதகையில் தங்கியிருக்கும் ஆளுநர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு, முக்கிய கோயில்களுக்கும் செல்கிறார். இதையொட்டி உதகையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT