Published : 02 Oct 2017 06:07 AM
Last Updated : 02 Oct 2017 06:07 AM

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததன் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

நடப்பாண்டில் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை, காலம் கடந்து, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பெய்தது. இதனால், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

கடந்த சில வாரங்களாகவே காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 93.93 அடியை எட்டியுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி மேட்டூர் அணையில் இருந்து இன்று (2-ம் தேதி) முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால், டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 93.93 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 17,875 கனஅடியாகவும், நீர் திறப்பு 1000 கனஅடியாகவும் இருந்தது. அணையின் நீர் இருப்பு 57.257 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x