Published : 27 Oct 2017 09:43 PM
Last Updated : 27 Oct 2017 09:43 PM

வடகிழக்குப் பருவமழையை சந்திக்க அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசின் அனைத்துத் துறைகளும் வடகிழக்கு பருவமழையினை சந்திக்க தயார் நிலையில் உள்ளன என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு இந்தாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வேலுமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழையால், தமிழக மக்கள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாது காத்திடும் வகையில், அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள நிலையில், இதனை திசை திருப்பும் வகையிலும், பொது மக்களிடையே ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், தமிழக அரசின் மீது அவதூறை அள்ளி வீசி மு.க.ஸ்டாலின் வழக்கம் போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து முதல்வர் தலைமையிலும், எனது தலைமையிலும், தலைமைச் செயலாளர் தலைமையிலும், வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தலைமையிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசின் அனைத்துத் துறைகளும் வடகிழக்கு பருவமழையினை சந்திக்க தயார் நிலையில் உள்ளன.

குறிப்பாக, கடந்த 11.10.2017 அன்று எனது தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் ஊடகங்களிலும், வெளியாகியுள்ளன. இருந்தும், இதுவரை அமைதியாக இருந்துவிட்டு இத்தனை நாள் கழித்து திடீரென ஸ்டாலின் அரசைக் குறைகூறி அறிக்கை வெளியிட அவசியம் என்ன?அவர் அறிக்கை வெளியிட்ட நாள் 25.10.2017. அன்றுதான் தலைமைச் செயலகத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில் அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை அறிந்துகொண்ட மு.க.ஸ்டாலின், அதற்கு முன்னதாக அரசின் மீது அவதூறு பரப்பிட வேண்டும் என்ற முனைப்புடன் அபத்தமான அறிக்கையை அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்முறையாக அனைத்து காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் உயரதிகாரிகள் மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து விரிவான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று (26.10.2017) நடைபெற்றது என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும். அவர் அறிக்கைவிட்டதால் தான் அந்த கூட்டமே நடந்தது என்று அவர் சொன்னாலும் வியப்பதற்கில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரைகுறை கருத்துகளை அள்ளித் தெளிப்பதற்கு முன், வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி மேற்கொண்டுள்ள விரிவான நடவடிக்கைகளை ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பராமரிக்கப்படும் 1,894 கி.மீ. நீளத்திலான 7,351 எண்ணிக்கையிலான மழைநீர் கால்வாய்களில் 95 சதவீதம் தூர் வாரப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் மூலம் செல்லும் மொத்த மழைநீரும் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 30 பெரிய கால்வாய்கள் மற்றும் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் 16 கால்வாய்கள் மூலமே கடலில் சென்றடைய வேண்டும்.

இந்த ஆட்சியில் வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிக நவீன ஆம்பீபியன் மற்றும் ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் இந்த கால்வாய்களில் சிறப்பான முறையில் தூர் வாரப்பட்டு,அவற்றின் நீர் கடத்தும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் வடியும் நேரம் மிகவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு முனைப்புடன் மேற்கொண்ட இந்த தூர் வாரும் பணிகளை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ம.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் கால்வாய், ஜாப்பர்கான்பேட்டை கால்வாய் போன்ற பகுதிகளில் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதேபோல, திமுகவைச் சேர்ந்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சேகர்பாபு பக்கிங்காம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் ஏகாங்கிபுரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். இவர்களது வேண்டுகோளின்படி சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பல்வேறு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

2015-ம் ஆண்டில் பெய்த பெருமழைக்குப் பின்னர், தமிழக அரசால் உலக வங்கி நிதியுதவி மற்றும் மத்திய, மாநில அரசு நிதியின் மூலம் மொத்தம் ரூ.1,104.40 கோடி மதிப்பில் 376 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டங்கள் தீட்டப்பட்டு அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் 80 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை உலக வங்கியின் உயர்மட்டக் குழு கடந்த மாதம் ஆய்வு செய்து கால்வாய்கள் தரமான முறையில் கட்டப்பட்டு, உபயோகப்படுத்தப்படுவதாக பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டு கூறவிரும்புகிறேன்.

கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையின்போது மழைநீர் செல்ல வழியில்லாத 92 இடங்கள் கண்டறியப்பட்டு உடனடியாகஅங்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன.

2015 பெரு மழையினால் ஏற்பட்ட வெள்ள இழப்புகளுக்காக மத்திய அரசிடமிருந்து சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ரூ.300 கோடி பெறப்பட்டு பல்வேறு உட்கட்டமைப்புக்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன. அதில் மழையினால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், மழைநீர் வடிகால்கள், தெரு விளக்குகள், பூங்காக்கள், பள்ளிக் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் மற்றும் முகாம்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.

மேலும் 2016 வார்தா புயலின்போது ஏற்பட்ட சேதங்களுக்காக ரூ.75 கோடி அரசால் வழங்கப்பட்டு சேதமடைந்த பல்வேறு உள்கட்டமைப்புக்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் உள்ள 17 கோயில் குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் சிறு சிறு பராமரிப்பு பணிகள் மொத்தம் ரூ.2 கோடியில் திட்டமிடப்பட்டு அவையாவும் சீர் செய்யப்படுகின்றன. மேலும், சென்னையில் உள்ள மொத்தம் 246 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு அவை யாவும் மிக சிறப்பான முறையில் பராமரிக்கப்படவும் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையிலும் சீர்படுத்த கலந்தறிதற்குரியவர்கள் நியமிக்கப்பட்டு விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வில்லிவாக்கம் ஏரி மற்றும் பள்ளிக்கரணை ஏரி ஆகியவை முறையே ரூ.18 கோடி மற்றும் ரூ.20 கோடியில் மிக சிறப்பான முறையில் சீர்படுத்தவும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும் இறுதிகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகளில் பெய்யாத பெருமழை பெய்தபோதும், 3 நாட்களில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஒரு வார காலத்தில் அனைத்து இடங்களிலும் மின்சாரம் சீரமைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் டன் குப்பைகள் 3 நாட்களில் அள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவி சென்னை மாநகரம் மழைக்கு முந்தைய நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இது உலக அளவில் கூர்ந்து நோக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது என்பதை இந்நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல, வார்தா புயலின்போது ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தபோதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட பணியாளர்களுடன் வனத்துறையின் அனைத்து பணியாளர்களும் மிக நவீன இயந்திரங்களுடன் வரவழைக்கப்பட்டு, சென்னை மாநகரில் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டு புயலின் சுவடே இல்லாமல் சரி செய்யப்பட்டதை நாடே அறியும். ஸ்டாலின் இல்லை என்று சொல்வதால் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் இல்லாமல் போய்விடுமா ?

சென்னை தவிர்த்த இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள இடங்களை முன்கூட்டியே தல ஆய்வுகள் செய்யப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடிகால்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில், சென்னை தவிர்த்த இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பராமரிக்கப்பட்டு வரும் 14,013 கி.மீ. நீளத்தில், இதுவரை 10,949 கி.மீ நீளமும் பேரூராட்சிப் பகுதிகளில் 7,183 கி.மீ நீளத்திற்கும் தூர்வாரும் பணிகளும் சிதிலமடைந்த மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் பழுது பார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மொத்தமுள்ள 749 நீர்நிலைகளில் 567 நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டும், பேரூராட்சி பகுதியிலுள்ள 2,064 நீர்நிலைகளில் 1,880 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு நீர் கசிவுகள் ஏற்படாவண்ணம் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக மொத்தம் 689 டன் பிளீச்சிங் பவுடர், 796 டன் சுண்ணாம்பு பவுடர், 27,209 லிட்டர் பைரித்திரம், 16,099 லிட்டர் டெமோபாஸ் ஆகியவை தற்போது தயார் நிலையில் உள்ளது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வரும் 45,801 எண்ணிக்கையிலான சிறு பாலங்களில் 38,471 சிறு பாலங்களும், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 19,887 சிறு பாலங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய பாலங்களையும் சுத்தம் செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 590 கி.மீ. நீளத்திற்கும், பேரூராட்சிப் பகுதிகளில் 77 கி.மீ. நீளத்திற்கும் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக புயல் பாதுகாப்பு மையங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பிற பொதுக் கட்டிடங்கள் முன்கூட்டியே பழுது நீக்கம்செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தடுப்புப் பணிகளை எதிர் கொள்ளும் விதமாக போதிய அளவில் நிவாரண மையங்கள், மருத்துவ குழுக்கள், தேவையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மணல் மூட்டைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றத் தேவையான ஜெனரேட்டர்கள், சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மர அறுவை இயந்திரங்கள் ஆகியவைதயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள 37,936 பணியாளர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 22,816 பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

பேரூராட்சி பகுதிகளில், சென்னை மாவட்டம் நீங்கலாக, மாவட்டத்திற்கு 2 குழுக்கள் வீதம் 31 மாவட்டங்களிலும் 62 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 21,609 சிறுபாசன ஏரிகள் மற்றும் 48,758 ஊரணிகள் / குளங்கள் / குட்டைகள் ஆகமொத்தம் 70,367 நீர் ஆதார அமைப்புகள் உள்ளன. இவை அனைத்திலும் உடைப்புகள் ஏற்படா வண்ணம், கரைகள் பலப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து அரசு வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள வயர்லஸ் கருவிகளை சீர் செய்து மழைக்காலத்தின் போது பயன்படுத்திட ஏதுவாக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாவட்ட நிலை அலுவலகங்களிலும் உள்ள வயர்லஸ் கருவிகளும் செயல்பாட்டில் உள்ளன.

அவசரகால சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு அனைத்து ஊரகப் பகுதிகளிலும், குறிப்பாக கடலோர மற்றும் மலைப்பாங்கான மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் தெரியப்படுத்த, அனைத்து துறை அலுவலர்களுக்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் வடகிழக்கு பருவமழை குறித்த 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு பிரிவாக மக்கள் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து அவற்றை உடனுக்குடன் செயல்படுத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு மழை மற்றும் புயலால் அடிக்கடி பாதிக்கப்படும் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அரசு எடுத்துள்ள ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முற்றிலுமாக மறைத்துவிட்டு, அரசு இயந்திரத்தின் முன் ஒரு துகளாக இருக்கும்திமுகதான் இதையெல்லாம் செய்ய வேண்டும், அதற்காக திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஸ்டாலின் கூறுவது மிகவும் அபத்தமாக உள்ளது. அரசின் புகழை மறைக்க அறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலினின் உண்மை சொரூபத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்'' என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x