Published : 04 Jun 2023 04:00 AM
Last Updated : 04 Jun 2023 04:00 AM

சென்னை சாலைகளில் தனித்தனி வழித்தட பாதைகளை முறையாக அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விபத்துகளை தவிர்க்க சென்னை சாலைகளில் போக்குவரத்து விதிகளின்படி இருசக்கர வாகனம், இலகுரக வாகனம், கனரக வாகனங்களுக்கான தனித்தனி வழித்தட பாதைகளை முறையாக அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் குமார தாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘தொழில் நிமித்தமாக தினமும் சென்னை சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகளில் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட தனித்தனி வழித்தட பாதைகள் (லேன்கள்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பாதைகளை முறையாக வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை.

உயிரிழப்பு சம்பவங்கள்: போக்குவரத்து போலீஸாரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ இதை கண்டுகொள்வதில்லை. இதனால் சென்னை மாநகரில் அதிக எண்ணிக்கையில் வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கும் முக்கிய நகரங்களில் சென்னை முதலாவது இடத்தில் உள்ளது.

சென்னையில் கனரக வாகன ஓட்டிகளோ, இலகுரக வாகன ஓட்டிகளோ அல்லது இரு சக்கர வாகன ஓட்டிகளோ யாருமே தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வழித் தடத்தை பயன்படுத்துவது இல்லை. மற்ற இடங்களைப்போல இது தொடர்பான போக்குவரத்து விழிப்புணர்வும் வாகன ஓட்டிகளுக்கு இல்லை.

சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தட பயணிகள் நடைபெற்று வருவதால் இந்த தனித் தனி பாதைகளை முறையாக அமல்படுத்த முடிய வில்லை என போக்குவரத்து போலீஸாரும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: எனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி தனித்தனி பாதைகளை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதி-க்கு தள்ளி வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x