Published : 27 Aug 2019 11:31 AM
Last Updated : 27 Aug 2019 11:31 AM

பத்தாம் வகுப்பு அலசல்: வழிகாட்டும் மொழிப் பாடங்கள்

எஸ்.எஸ்.லெனின்

புதிய வினாத்தாள் மாதிரிகளின் அடிப்படையானது மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்புக்குப் பின்னரும் பலவகையிலும் கைகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான அம்சங்கள் புதிய வினாத்தாள் மாதிரியில் நிறைந்துள்ளன. எனவே, மொழிப் பாடங்கள் உட்பட அனைத்தையும் புரிந்துகொண்டு படித்துத் தேறுவது உயர்கல்வி முதல் வேலைவாய்ப்புவரை உதவிகரமாக அமையும்.

பத்தாம் வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் போன்றே தமிழ், ஆங்கிலப் பாடங்களின் வினாத்தாள்கள் 4 பகுதிகளாக அமைந்துள்ளன. ஒரு மதிப்பெண் பகுதிகளில் 14 வினாக்கள், 2, 5 மதிப்பெண் பகுதிகளில் தலா 10, எட்டு மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ வகையிலான 2 வினாக்கள் என்பதாக அவை அமைந்துள்ளன. இவற்றை நம் மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள முக்கியப் புள்ளிகள்:

தமிழ் முதல் தாள்

* தமிழ் முதல்தாள் செய்யுள், உரைநடைக்கானது. ஒரு மதிப்பெண் பகுதிக்கு முழுமையாகத் தயாராகப் புத்தகத்திலுள்ள வினாக்களுக்கு அப்பால் பாடங்களுக்கு உள்ளிருந்தும் வினாக் களை வடிவமைத்துப் பயிற்சி பெறுவது அவசியம்.
* இரண்டாம் பகுதியான 2 மதிப்பெண் வினாக்கள் ஓரிரு வார்த்தைகளிலோ அல்லது வினாவிலிருந்து எடுத்து எழுதுவதாக எளிமையாக அமைந்திருக்கும். இதன் இரண்டாம் பிரிவில் கட்டாய வினாவாக மனப்பாடக் குறள் ஒன்றும் (வி.எண். 28) வருகிறது.
* புத்தகங்களுக்கு அப்பால் 1, 2 மதிப்பெண்களுக் கான கூடுதல் வினாக்களுக்கு, பிரத்யேகச் செயலி, இணையதள உதவியையும் நாடலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).
* 5 மதிப்பெண் பகுதியில் ‘சாய்ஸ்’ இல்லாத மூன்றாம் பிரிவின் 4 வினாக்களில் ஒன்றாகக் கட்டாய வினாவான மனப்பாடச் செய்யுள் (வி.எண். 42) இடம்பெறுகிறது. வினாக்கள் 40, 41 ஆகியவை சுயமாகவே எழுதும் வகையில் எளிமையாக இருக்கும்.

தமிழ் இரண்டாம் தாள்

* இரண்டாம் தாள் இலக்கணம், துணைப்பாடம், மொழிப்பயிற்சி, கட்டுரை, கடிதம் ஆகியவற்றுக்கானது. படைப்பாற்றலையும் மொழித் திறனையும் சோதிக்கும் இரண்டாம் தாளில் முழு மதிப்பெண்கள் பெறத் தினசரி செய்தித்தாள் வாசிப்பு, புத்தக வாசிப்பு போன்றவை உதவும். அனைத்துப் பாடங்களையும் முற்றாக ஓரிரு முறை வாசித்துவிடுவதும், துணைப்பாடக் கதைகள் மட்டுமன்றி இதர பகுதிகளையும் சக மாணவர்களுடன் அவ்வப்போது விவாதிப்பதும் உதவும்.
* இரண்டாம் தாளின் 1, 2 மதிப்பெண்களுக்கான முதலிரண்டு பகுதிகள் முதல் தாளைப் போன்றே அமைந்திருக்கும். ‘பலவுள் தெரிக’ பகுதியில் குழப்பமின்றிச் சரியான விடையை அடையாளம் காணப் பயிற்சி அவசியம்.
* 5 மதிப்பெண் பகுதியின் இலக்கண, மொழிப் பயிற்சி வினாக்களை முந்தைய வகுப்புகளில் கற்றதிலிருந்து ஒப்பிட்டுப் படிப்பது உதவும். அதுபோன்றே 8 மதிப்பெண்களுக்கான பொதுக்கட்டுரை, கடிதம் ஆகியவற்றையும் பயிற்சிசெய்வதுடன், அவற்றைக் கருத்துச் செறிவுடன் தனித்துவ மேற்கோள்களுடன் எழுதுவதற்கான பிரத்யேகக் குறிப்புகளைத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.
* 2 மதிப்பெண்ணில் வி.எண். 28, 5 மதிப்பெண்ணில் வி.எண். 37 ஆகியவை கட்டாய வினாக்கள்.

ஆங்கிலம் முதல் தாள்

* முதல் தாளின் 1 மதிப்பெண் வினாக்களில் தலா 3 Synonyms, Antonyms ஆகியவையும், அடுத்து வரும் 8 வினாக்களில் Singular/Plural, Abbreviation, Homophones போன்றவையும் எளிமையானவை.
* 2 மதிப்பெண் பகுதியில் Prose, Poetry, Grammar என 3 பிரிவுகளில் சாய்ஸ்களுடன் விடையளிக்கலாம். முதல் 3 Prose, Poetry பாடங்களுக்கு முழுமையாகத் தயாராவது அப்பகுதிக்கான மதிப்பெண்களைக் குறைந்த பட்சமாக உறுதிசெய்யச் சராசரி மாணவர்களுக்கு உதவும். மூன்றாம் பிரிவின் Punctuation குறித்த கட்டாய வினா (வி.எண். 28) உள்ளது.
* 5 மதிப்பெண் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கு அத்தியாவசியமான ‘Spot the Error’ என்பது கட்டாய வினா (வி.எண். 42). புத்தகத்திலுள்ள வினாக்களைப் படித்தாலே இப்பகுதியின் கணிசமான வினாக்களுக்கு விடையளித்து விடலாம்.
* இரண்டு 8 மதிப்பெண் வினாக்களில் முதல் வினாவுக்கு Prose பகுதிக்கான ‘a’ வினாவுக்கு சராசரி மாணவர்கள் முன்னுரிமை தரலாம். இரண்டாம் வினா அனைவரும் குறிவைக்கும் அடிப்படையான Memory Poem பகுதிக்கானது.

ஆங்கிலம் இரண்டாம் தாள்

* இரண்டாம் தாள் Non-Detail பாடங்களுக்கானது என்ற போதும், தற்போதைய புதிய வினாத்தாள் மாதிரிக்குத் தயாராக Detail படிப்பு அவசியமாகிறது. பாடங்களை நடத்தும்போதே கவனித்து, கதையையும் கதாபாத்திரங்களையும் உள்வாங்குவது அவசியம். ஒரு மதிப்பெண்களில் சில வினாக்கள் பாடங்களுக்கு உள்ளிருந்தும் கேட்கப்படலாம்.
* இரண்டு பிரிவாக அமைந்துள்ள 2 மதிப்பெண் பகுதியின் முதல் பிரிவில் எளிதில் எதிர்பார்க்கக்கூடிய பொதுவான வினாக்களும், இரண்டாம் பிரிவில் கூடுதல் பயிற்சியைக் கோரும் வினாக்களும் இடம்பெற்றிருக்கும். இதில் முந்தைய வகுப்புகள் மாணவருக்கு நன்கு அறிமுகமான Road Map குறித்த கட்டாய வினா (வி.எண். 28) இடம்பெற்றுள்ளது. 5 மதிப்பெண் பகுதியில் வி.எண். 42 கட்டாய வினா.
* Hints Developing, Letter writing ஆகிய 8 மதிப்பெண் வினாக்களை முந்தைய ஆண்டுப் பயிற்சிகளின் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ளலாம்.
* பொதுவாக ஆங்கிலப் பாடத்தை அதிகாலையில் எழுந்து படிப்பது, படித்ததை அவ்வப்போது எழுதிப் பார்ப்பது, வகுப்புத் தேர்வுகளை வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்வது, Grammar பகுதிகளுக்குக் கூடுதல் பயிற்சி எடுப்பது ஆகிய முன்னேற்பாடுகள் அதிக மதிப்பெண் எடுக்க உதவும். ஓய்வு நேரத்தில் ஆங்கிலச் செய்தித்தாள் வாசிப்பது இரண்டாம் தாளில் தனித்தன்மையுடன் விடையளிக்க உதவும்.
* பத்தாம் வகுப்புப் பாட நூல்கள் உதவி ஏடுகள், பிரத்யேகக் குறிப்புகள் போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருப்பதும் பின்னாளில் உதவும். இந்தத் தொலைநோக்கிலான தயாரிப்பும் ஆர்வமும் பத்தாம் வகுப்பு பாடங்களில் மாணவர் களுடைய அர்ப்பணிப்பைக் கூடுதலாக்கும்.

கூடுதல் வினாக்களுக்கு

புதிய வினாத்தாள் மாதிரியில் புத்தகத்தின் பயிற்சி வினாக்களுக்கு அப்பாலும் உருவாக்கப்பட்ட வினாக்கள் இடம்பெறும். இவற்றை எதிர்கொள்ளப் பாடம் எதுவானாலும் அவற்றை முழுமையாக ஓரிரு முறை வாசிப்பதும், வாக்கியங்களின் முக்கியமான சொற்களை அடிக்கோடிட்டு அவற்றிலிருந்து புதிய வினாக்களை உருவாக்கிப் படிப்பதும் உதவும்.

மேலும் உதவிக்கு ‘தீக்ஷா’ செயலியில் ஆசிரியர்கள் பட்டியலிட்டுள்ள கூடுதல் வினாக்களை மாணவர்கள் அணுகிப் பெறலாம். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பிரத்யேக இணையதளத்திலும் (https://tntp.tnschools.gov.in/lms/), தமிழகம் நெடுகிலுமிருந்து ஆசிரியர்கள் அவ்வப்போது பதிவேற்றி வரும் புதிய வினாக்கள் பட்டியலையும் தங்கள் ஆசிரியர் மூலமாகப் பெற்று மாணவர்கள் பலனடையலாம்.

பாடக்குறிப்புகளை வழங்கிய பட்டதாரி ஆசிரியர்கள்: தமிழ்- க.சிவக்குமார், அரசு மேல்நிலைப் பள்ளி, ஏலாக்குறிச்சி, அரியலூர் மாவட்டம். ஆங்கிலம்- ந.ஐயப்பன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பூதலூர், தஞ்சை மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x