

தோப்புத்தோட்டம் என்று அதை அழைப்பார்கள். மோட்டார் ரூமைச் சுற்றிலும் மா, தென்னை மரங்கள் செழித்து வளர்ந்திருக்க, அவற்றை ஒட்டியே தோட்டம் அமைந்திருந்தது. பருத்தியும் சோளமும் மாறிமாறிப் பயிர் செய்து கொண்டிருந்த செழிப்பான பூமி.
மோட்டார் ரூமை ஒட்டியிருக்கும் கிணற்றில் முக்கால் கிணறு நீர் நிரம்பி கெத்து கெத்தென்று இருக்கும். அங்கேதான் சிறுவர்களாகிய நாங்கள் நீச்சல் பழகினோம். மோட்டார் ரூமின் மேலிருந்து அச்சமில்லாமல் குதிக்கையில் கிணறே குலுங்கும்.
பயமறியாத வயது. உயரமோ, தண்ணீரோ, அம்மாக்களின் திட்டோ, மாமாக்களின் பிரம்படியோ எதுவுமே எங்களைப் பயமுறுத்தியதில்லை. முதல் முறையாகப் பயந்தது பாம்பைப் பார்த்தபோதுதான்.
கிணற்றில் இறங்க, கற்களாலான படிக் கட்டுகள் உண்டு. கிணற்றில் முக்கால்வாசி நீர் நிரம்பியிருந்ததன் காரணமாகப் பல படிக்கட்டுகள் நீருக்குள் மூழ்கி இருக்க, நீர்மட்டத்துக்கு மேலே ஏழெட்டுப் படிக்கட்டு கள்தான் இருந்தன. அதில் கீழ்ப்படிக்கட்டை ஒட்டி ஒரு பொந்து இருந்தது.
நாங்கள் நீரில் குதித்து கால்களை நீருக்குள் அளைந்தபடி மிதந்துகொண்டே பேசிக்கொண்டிருக்கையில் செல்வம்தான் அதைப் பார்த்தான். கண்களில் லேசான அச்சத்துடன், “ஏய் பாம்புடா...” என்றான்.
அனைவரும் அவன் கைகாட்டிய பக்கம் திரும்ப, அந்தப் பொந்திலிருந்து புறப்பட்டுப் படிக்கட்டில் இருந்தது அந்தப் பாம்பு. கருநாகம். ஐந்தடி நீளமிருக்கும். பீதியடைந்த வரதன், அதனை அச்சுறுத்த நினைத்து ஓங்கி தண்ணீரில் கைகளைப் படார் என்று அடிக்க, தண்ணீர் நாற்புறமும் சிதற, கருநாகம் `உஸ்ஸ்’ என்று சீறிப் படமெடுத்து நின்றது.
யம்மாடி! கருகருவென்கிற அதன் உடலும், விரிந்து நின்ற படமும் எங்களை விதிர்விதிர்க்க வைத்தது. பயத்தில் எங்களுக்கு வாய் உலர, சீனிதான் உரத்த குரலில் ‘பாம்பு பாம்பு’ என்று கத்தினான்.