

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளில் ஒன்று கண்களை மயக்கும் கம்பம். கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய தொன்மங்களைத் தக்கவைத்திருக்கும் உத்தமபாளையம், கம்பத்திலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது.
மதுரையை எரித்து முடித்த கண்ணகி, வைகைக் கரையில் மேற்கு நோக்கி நடந்து கம்பம் அருகேயுள்ள பத்தினிக்கோட்டையில் தங்கி, அங்கிருந்துதான் விண்ணேற்றம் அடைந்தார் என்பது வாய்மொழி வரலாறு.
விஜய நகரக் கோட்டை
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணகியின் வரலாற்றுக்கு 12 நூற்றாண்டுகள் கழித்து 14ஆம் நூற் றாண்டில் மீண்டும் கவனம் பெற்றது கம்பம். அந்தப் பள்ளத்தாக்கின் மண்வளமும் நீர் வளமும் இதமான தட்பவெப்பமும், அப்பகுதியைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று பல குறுநிலமன்னர்கள் சண்டையிட்ட வரலாறு அது.
அப்படிக் கம்பம் பள்ளத்தாக்கை ஆட்சிசெய்த உள்ளூர் ஆட்சியாளர் களுடன் சண்டையிட்டு, அதை பொ.ஆ. (கி.பி.) 1374இல் கைப்பற்றியவர் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் குறுநில மன்னராகவும் பின்னர் ஜமீனாக வும் ஆட்சிசெய்த கம்ப நாயக்கர்.
தன் சகோதரர் உத்தம நாயக்கருடன் இப்பகுதியில் அவர் கோட்டைக் கட்டி ஆண்டதால் கம்பம் எனப் பெயர் பெற்ற தாகக் குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஆனால், இன்று நகராட்சியாக விளங்கும் கம்பத்தின் தற்கால அடையாளம் கண்ணகியோ, அங்கே கட்டப் பட்ட கோட்டையோ, விஜயநகர ஆட்சியாளர்களோ அல்ல.
கம்பம் பள்ளத் தாக்கில் விளைந்து கொழிக்கும் பன்னீர்த் திராட்சை. பசுமைப் போர்த்திய திராட்சைத் தோட்டங்கள்தான் தற்போது கம்பத்தின் முதன்மை அடை யாளம். 2023இல் ‘கம்பம் பன்னீர்த் திராட்சை’ என்று புவிசார் குறியீடும் பெற்றுவிட்டது.