Last Updated : 04 Jan, 2016 12:28 PM

 

Published : 04 Jan 2016 12:28 PM
Last Updated : 04 Jan 2016 12:28 PM

குறள் இனிது: இங்கே முடியும்... அங்கே முடியாதா?

நெடும்புனுலுள் வெல்லும் முதலை அடும்புனலை

நீங்கின் அதனைப் பிற - குறள் 495



எனது நண்பர் ஒருவர் உலகெங்கும் கிளைகள் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பெங்களூர் அலுவல கத்தில் பணி செய்து வந்தார். அவர் பெயர் எதற்கு? மகா கெட்டிக்காரர்.

மனித வளத்துறையில் வேலை வெவ்வேறு நாடுகளின் சட்டதிட்டங்களும் நடைமுறை களும் வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால் இவருக்கு அதெல்லாம் அத்துப் படி. யாரையும் குழப்பும் அஞ்ச வைக்கும் பல பணியாளர் பிரச்சினைகளை அநாசய மாகத் தீர்த்து வைப்பார்.

அவரது அசாத்திய திறமையைப் பாராட்டி அவருக்கு அடிக்கடி சில லட்சங்கள் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டன.

இப்படி சில ஆண்டுகள் ஓடின. நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் அவர்களது மென்பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு சில இளைஞர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார்கள். மிகப் பெரிய ஆர்டர்களை பெற்று வந்த அவர்களுக்குச் சில கோடிகள் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதைப் பார்த்து நண்பருக்குத் தாங்கவில்லை. பொருமினார், வெம்மினார்.

‘அவன்கள் என்ன பெரிய இவன்களா? சும்மா டையைக் கட்டிக்கொண்டு, தாட்பூட் ஆங்கிலம் பேசிக் கொண்டு இங்கே அங்கே சுற்றுவது பெரிய வேலையா? நிறுவனத்தின் சேவைகள் குறித்த அனைத்து விவரங்களும் எனக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியுமா?’ என்கிற ரீதியில் பேசியதுடன் இருக்காமல் விற்பனைப் பிரிவுக்குத் தன்னை மாற்றும்படி விண்ணப்பமும் கொடுத்துவிட்டார். நிர்வாகம் ‘விற்பனைப் பிரிவு என்பது ஒரு தனி உலகம்.

எல்லோருக்கும் சரிபடாது’ என்று சொல்லிப் பார்த்தார்கள். நம்ம ஐயா கேட்கவில்லை. அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் விற்பனைப் பிரிவுக்கு அவரை மாற்ற வேண்டியதாயிற்று. நண்பர் ‘இனி நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று கிளம்பி விட்டார்!

ஆனால் அறையினுள் உட்கார்ந்து விதிமுறைகளையே சொல்லிச் சொல்லிப் பழகியவருக்கு புதிய புதிய ஆட்களைப் பார்த்து அவர்களிடம் தங்களது மென்பொருளைப் பற்றி விளக்கி, அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்குப் பொறுமையாய் பதில் சொல்லி, வாங்கப் போகிறார்கள் என்று நினைக்கும் பொழுது புதுக் கேள்விகள் விளைவதுடன், விலையும் தடையாய் இருப்பது கண்டு திகைத்தார்! மூச்சு திணறியது!! மாதா மாதம் விற்பனைக்கான குறைந்தபட்ச இலக்கை அடைந்தால் தான் முழுச் சம்பளம் என்பது அவருக்கு புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை.

ஏண்டா நமக்குப் பழகிய பாதுகாப்பான இடத்தை விட்டு வந்தோம் என வருந்தினார்! தப்பித்தால் போதும் என்று அவர் மீண்டும் மனிதவளத்துறைக்கே சென்றார் என்பதைச் சொல்லவா வேண்டும்?

எந்த இடத்தில் வெற்றி பெறலாம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அது ஒவ்வொருவரின் அணுகுமுறை, அனுபவம் திறன் சார்ந்தது.

கடினமான சூழ்நிலையில் தினமும் வெற்றி காண்பவர்கள் கூடத் தமக்குப் பழக்கமில்லாத ஒவ்வாத இடத்திற்குச் சென்றால் தாக்குப் பிடிக்க முடியாது. மாரத்தான் ஓட்டத்தில் முதலிடம் பெறலாம் ஆனால் 100 மீட்டரில் வெல்லமுடியாது! ஆழமான நீரில் மற்ற விலங்குகளை வெற்றி கொள்ளும் முதலை, நீரை விட்டு வெளியே வந்துவிட்டால் எளிதில் தோற்று விடும் என்கிறார் வள்ளுவர்!.

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x