Published : 09 May 2016 10:58 AM
Last Updated : 09 May 2016 10:58 AM

முதலீட்டாளர்கள் விரும்பும் தேசம் அமெரிக்கா

பங்குச் சந்தை குறித்து ஓரளவு பரிச்சயம் இருப்பவர்களுக்கு வாரன் பபெட்டை தெரியாமல் இருக்க முடியாது. அவரின் நிறுவன மான பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத் தின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த வாரம் அமெரிக்காவில் (ஏப்ரல் 30) நடந்தது. இதில் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பபெட் மற்றும் துணைத் தலைவருமான சார்லி முங்கெரும் (Charlie Munger) கலந்துகொண்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு 5 மணி நேரத்துக்கு மேல் பதில் அளித்தனர்.

எப்படி கலந்துகொள்வது?

இந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொள் வதே பெரும் செலவு பிடிக்கும் செயல் ஆகும். பெர்க்‌ஷயர் நிறுவனத் தின் முதலீட்டாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அவர்களும் கூட நிகழ்ச்சிக்கு முன்பாக பாஸ் வாங்க வேண்டும். ஒரு வேளை முதலீட்டாளராக இல்லை என்றாலும், அந்த நிகழ்ச்சிக்கு செல்லாத பெர்க்‌ ஷயர் நிறுவனத்தின் பங்குதாரர் களிடம் பாஸ் வாங்கிச் செல்லலாம். இபே நிறுவனத்தில் கூட இதில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் விற்கப்பட்டன.

விமான செலவு, தங்குமிடம், உள்ளிட்டவை பெரிய செலவுகளாக இருப்பதால் இந்த ஆண்டு முதல் முறையாக யாகூ பைனான்ஸ் இணையதளம் மூலமாக ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆங்கிலம் மற்றும் மாண்டரீன் மொழியில் இந்த நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து பல முதலீட்டாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வருடமும் செல்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு 40,000 நபர்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஆன்லைனில் நேரலை செய்யப்பட்டதால் இந்த ஆண்டும் அதே அளவு மக்கள்தான் இருப்பார்கள் என்று அமெரிக்க பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

கடந்த வருடம் நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பிபிஎப்ஏஎஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பராக் பரிக் கார் விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பேசினார்

ஒவ்வொரு வருடமும் இவர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிறப்பு கவனம் பெரும். முதலீடு, பங்குகள், நிறுவனத்தின் நிதி நிலைமை என பல விஷயங்கள் பேசினாலும், இப்போது அமெரிக்காவில் தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் குறித்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக பேசுபவர் வாரன் என்பதால், ஒரு வேளை டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு யார் வென்றாலும் பிரச்சினை இல்லை. இருவரில் எவர் ஜெயித்தாலும் பெர்க்‌ஷயர் நிறுவனத்துக்கு பிரச்சினை இல்லை. அதேபோல வெள்ளை மாளிகையில் யார் அதிபராக இருந்தாலும் முதலீடு மற்றும் தொழிலுக்கு சாதகமான சூழல் அமெரிக்காவில் நிலவும். தொழிலுக்கு சாதகமான சூழல் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. தொழிலுக்கு ஏற்ற சமூகமாகவும் இருப்பதால் யார் அதிபராக வந்தாலும் பிரச்சினை இல்லை, அதிபர்கள் வருவார்கள் போவார்கள் என்று வாரன் கூறியிருக்கிறார்.

தெரியாத தொழிலில் முதலீடு செய்வதில்லை என்பது வாரனின் பாலிசி. அதனால் இண்டர்நெட்/ஐடி சார்ந்த தொழிலில் அவர் பெரிய ஆர்வம் காண்பித்தது இல்லை. கடந்த கூட்டத்தில் இணையம் பல மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது. இன்னும் சிலரின் வாழ்க்கையை அழிக்க காத்திருக்கிறது, இதனை எப்படி கையாளுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம், ஆனால் பெர்க்‌ஷயர் நிறுவனத்துக்கு இணைய வளர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை என்று வாரன் பபெட் கூறியிருக்கிறார்.

சிகரெட் ஆபத்தானது என்பதால் அந்த பங்குகளில் முதலீடு செய்வதை வாரன் பபெட் விரும்ப மாட்டார். ஆனால் ஒரு வருடத்தில் கோக் உள்ளிட்ட பானங்கள் மூலம் 1.84 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள், ஆனால் கோக கோலா நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் 9.3 சதவீத பங்குகளை வைத்திருக்கிறதே என்ற பத்திரிகையாளர்களின் கேள் விக்கு, ஒரு நாளைக்கு 700 கலோரி அளவுக்கு நான் கோக் குடிக்கிறேன், நான் நீண்ட காலம் நலமாக வாழ்கிறேன் என்று பதில் கூற இவரது பதில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இன்னும் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அடுத்த வருட கூட்டத்துக்கு இப்போதே தயாராகி வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x