Last Updated : 09 May, 2016 11:05 AM

 

Published : 09 May 2016 11:05 AM
Last Updated : 09 May 2016 11:05 AM

உத்தராகண்ட் காட்டுத் தீ உணர்த்தும் பாடம்!

இன்னும் அணையாத தீ. 6,000 படை வீரர்கள் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல உயிரினங்கள் அழிந்திருக்கக்கூடும். ஆனாலும் தீ தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்து புனித கோயில்கள் மற்றும் இமாலயத்தின் முக்கிய மலைகள் சமவெளிகள் என அனைத்து இயற்கை அமைப்புகளையும் கொண்ட உத்தராகண்ட் மாநிலம் தற்போது தனது இயல்பை இழந்துள்ளது. இதுவரை 2,269 ஹெக்டேர் நிலங்கள் இந்த தீயில் கருகி நாசமடைந்துள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தின் மொத்த பரப்பளவு 53,483 கிலோ மீட்டர். இதில் 65 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அதிகம் காடுகள் காணப்படும் பகுதிகளில்தான் காட்டுத் தீ அதிகமாக நிகழும் என்பது உண்மை. ஆனால் இந்த ஆண்டில் கொஞ்சம் அதிகமாகவே உக்கிரத்தை காட்டியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்தம் 291 முறை நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு 14,624 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 20,667 முறை காட்டுத் தீ நிகழ்ந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டுமல்ல இமாச்சல பிரதேசத்திலும் காட்டுத் தீயால் 3 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், பசுமை காடுகள் ஆகியவை அழிவைச் சந்தித்து வருகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் தான் காட்டுத் தீ அதிகமாக நிகழ்கின்றன. இது அரசுக்கு மட்டுமல்ல இது அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும் காட்டுத் தீ ஒரு சூழலியல் பிரச்சினை அது எப்படி வணிக வீதியில் எழுதப்படுகிறது என்ற கேள்வி எழலாம். காட்டுத் தீ என்பது வெறும் சூழலியல் சம்மந்தப் பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. சூழலியலை கடந்து மக்கள் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் இதனுடன் பின்னி பிணைந்து இருக் கிறது. ஒரு காடு அழிந்தால் நூற்றுக் கணக்கான உயிரினங்கள் அழியும் பல அரிய வகை மரங்கள் அழியும். ஒட்டுமொத்த சூழலியல் மண்டலமே சீர்குலைந்து போகக்கூடிய நிலைமை ஏற்படும். இதையே நம்பி வாழும் மக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். அதுமட்டுமல்லாமல் சந்தன மரக் கடத்தலில் ஆரம்பித்து செம்மர கட்டை கடத்தல், யானையின் தந்தங்களை கடத்துவது என காட்டை வைத்து கோடிகளில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. பல மாபியாக்கள் இதை சுற்றி இயங்குகின்றன.

காட்டுத் தீ ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதாவது கோடைக்காலத்தில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் மரத்தில் இலைகள் உதிர்ந்து வறண்டு அதிக வெப்பத்தின் காரணமாக பற்றி எரிந்து விடும். இது இயற்கையால் நிகழ்வது. மனிதனின் அலட்சியத்தாலும் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உத்தராகண்ட் போன்ற மலை பகுதியில் பைன் மரங்கள் அதிகம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிர்பைன் மரங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலைகளுக்கு தீப்பற்றக்கூடிய தன்மை அதிகம். இந்த முறை தீப்பற்றியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்கின்றனர். அதனால் இந்த மரங்களை அழித்து விட வேண்டும் என்று கோஷம் எழுகிறது. மற்றொரு காரணமாக டிம்பர் மாபியாவினர் வேண்டுமென்றே காட்டுத் தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் மரங்கள் செழிப்பாக இருக்கும் போது அதை வெட்டுவதற்கு அனுமதியில்லை. காய்ந்த அல்லது துவண்டு போன மரங்களை மட்டும்தான் ஏலத்திற்கு விடுவார்கள். இதனால் வர்த்தகம் பாதிக்கும் என்பதற்காக காட்டுத் தீயை ஏற்படுத்திவிட்டால் பாதிப்புக்கு உள்ளான மரங்கள் ஏலத்திற்கு வரும் என்பதால் அதிக வருமானத்தை ஈட்டமுடியும் என்பதற்காக செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் காடுகளை அழித்துவிட்டால் நில பயன்பாட்டை அதிகப்படுத்தலாம் என்ற நோக்கத்திலும் காட்டுத் தீ ஏற்படுத்துவதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத் தீ எப்பொழுது ஏற்படும் என்று தெரியாததுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முன்கூட் டியே தெரிந்துவிட்டால் அதை கட்டுப் படுத்துவது எளிதாக இருக்கும். ஆனால் இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காட்டுத் தீ ஏற்பட்டுவிட்டால் அதை உடனடியாக அணைக்க முடியாது என்பதுதான் மிகப்பெரிய சிக்கல்.

இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என இந்தியா முழுவதும் மலைகளும் காடுகளும் விஸ்தரித்து கிடக்கிறது. மொத்த இந்திய நிலப்பரப்பில் 7,01,673 சதுர கிலோ மீட்டர் (2015 தகவலின் படி) அளவுக்கு காடுகள் இருக்கிறது. அதுவும் மிக அடர்த்தியான காடுகள் நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன.

மரக்கட்டைகளை எரிபொருளாக பயன்படுத்துவது இந்தியாவில் அதிகம். கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிபொருள் தேவை மரக்கட்டைகள் மூலமாகவே தீர்த்துக் கொள்ளப்படுகிறது. அதேபோல் பைன் மரங்கள் பேப்பர் தயாரிப்பதற்கு முக்கியமான மூலப் பொருள். இதை நம்பி 400 மில்கள் இயங்குகின்றன. பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என பல தொழில்கள் காடுகளை நம்பியே இருக்கின்றன.

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் காடுகள் மற்றும் அவற்றின் வளங்கள் 1.7 சதவீத பங்கை அளிக்கிறது. காடுகள் மூலம் பெறப்படும் பொருட்களினால் ஆண்டுக்கு 27,500 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இப்படி இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும் காடுகள் இன்று அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

2013ம் ஆண்டிலிருந்து காடுகள் 3,775 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது என்று அரசு கூறுகிற அதே வேளையில் 2,511 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள மிக அடர்த்தியான வன பகுதிகளை இழந்திருக்கிறோம். 2011ம் ஆண்டு தகவல் படி அழியும் தருவாயில் உள்ள காடுகள் பட்டியலில் இந்திய காடுகள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் 16,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஒருபக்கம் கடுமையான வறட்சி இன்னொரு பக்கம் காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்களால் வன பகுதிகள் அழிந்து வரும் நிலையால் இந்தியாவின் ஒட்டுமொத்த சூழலியலுமே அபாய கட்டத்திற்குள் சென்றுக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்வியலிலும் இயற்கையைக் காக்க வேண்டிய பொறுப்பைதான் இது போன்ற செய்திகள் உணர்த்துகின்றன. அடுத்த தலைமுறைக்கு இயற்கையை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த தலைமுறையிலேயே அழிவை சந்திக்க நேரிடுமோ எனும் அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனியாவது காடும் காடு சார்ந்த இடத்தை காப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவேண்டும்.

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் காடுகள் மற்றும் அவற்றின் வளங்கள் 1.7 சதவீத பங்கை அளிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும் காடுகள் இன்று அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x