Last Updated : 02 May, 2016 12:02 PM

 

Published : 02 May 2016 12:02 PM
Last Updated : 02 May 2016 12:02 PM

ஊழியர்களைக் கொண்டாடும் மாருதி!

பொதுவாக ஊழியர்களிடம் நேரத்துக்கு வந்து அளித்த வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிறுவனங்கள்தான் அதிகம். அதிகபட்சம் மின்சாரத்தை சிக்கனமாக செலவிடுவதன் மூலம் நிர்வாகச் செலவுகளை மிச்சப்படுத்தும் நிறுவனங்களே ஏராளம்.

ஆனால் ஊழியர்களிடமிருந்து ஆலோசனை பெற்று அதைச் செயல்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 281 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது மாருதி சுஸுகி.

இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் ஆலோசனை பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் உள்ள ஊழியர்கள் செலவைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கலாம்.

கடந்த ஆண்டு இந்நிறுவன ஊழியர்களிடமிருந்து வந்த ஆலோசனைகள் 6,98,640 ஆகும். அதாவது சராசரியாக ஓராண்டில் ஒரு ஊழியர் 38 ஆலோசனைகளை அளித்துள்ளார். இந்நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 15 ஆயிரமாகும்.

ஊழியர்களின் ஆலோசனையை செயல்படுத்தியதில் குறைந்த அளவில் மிச்சப்படுத்தியது கடந்த ஆண்டில்தானாம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதைவிட அதிக தொகை மீதமாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

கார் உதிரி பாகங்களில் ஒன்றான இன்ஸ்ட்ருமென்ட் பேனல்களில் தூசி படிவதைத் தடுக்க பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்படும். இதற்குப் பதிலாக நிரந்தரமான மூடியைப் பயன்படுத்தலாம் என ஒரு ஊழியர் பரிந்துரைத்தார். இதை செயல்படுத்தியதன் மூலம் நிறுவனத்துக்கு மீதமான தொகை ரூ. 26,59,642 ஆகும். அத்துடன் இயந்திர தூள்களை (ஸ்கிராப்) எடுத்துச் செல்வதும் குறைந்தது. இதனால் நிறுவனத்துக்கு மீதமான தொகை ரூ. 1,06,400 ஆகும்.

ஊழியர்கள் நிறுவனத்துக்கு ஆலோசனைகளை அளித்து அதைச் செயல்படுத்தும்போது அவர்களுக்கு மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது.

ஊழியர்களின் ஆலோசனைகள் செயல்படுத்தப்படும்போது அதற்குப் பாராட்டோடு ஊக்கத் தொகையும் கிடைப்பதால் ஊழியர்கள் ஆர்வத்தோடு ஆலோசனைகளை அளிக்கின்றனர்.

பிற நிறுவனங்களும் இதை செயல்படுத்திப் பார்க்கலாமே.!

அரசு ஊழியர்களுக்கு இலக்கு

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி ஊதியம் கிடைக்க உள்ளது. அத்துடன் அரியர்ஸும் கிடைக்கும். இதனால் அரசு ஊழியர்களிடம் கார்களை விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பட்டியலைத் திரட்டியுள்ளது.

47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 70 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் விற்பனையில் 18 சதவீதம் அரசு ஊழியர்கள் மூலமாகக் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டு நிறைவு வரை மட்டும் 13 லட்சம் மாருதி கார்களை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வாங்கியுள்ளனர். இது நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 16 சதவீதமாகும்.

மாருதி நிறுவனத் தயாரிப்புகள் அதிகம் விற்பனையானாலும் இந்நிறுவனம் விளம்பரத்துக்காகவும் அதிக அளவில் தள்ளுபடி சலுகைகளை அளிப்பதாலும் இதன் லாப அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.

தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதோடு விற்பனை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும் என நம்பலாம்.

ரியல் எஸ்டேட்டில் …

விற்பனையகம் மற்றும் சந்தை விரிவாக்க நடவடிக்கைக்காக நிலங்களைக் வாங்குவதற்கான பணிகளிலும் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது. இதற்கென ரூ. 800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் இந்த ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிக்கவும் நிறுவனம் தயாராக உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை யடுத்து நிலத்தை சொந்தமாக வாங்குவது அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் நிலத்தைக் கையகப்படுத்துவது உள்ளிட்ட வாய்ப்புகளையும் மாருதி ஆராய்ந்து வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்திடம் ரூ. 17 ஆயிரம் கோடி உபரியாக உள்ளது. இந்நிறுவனத்துக்கு 1,800 விற்பனையகங்களும், பனிமனைகளும் உள்ளன. 1,450 நகரங்களில் இதன் செயல்பாடு விரிவடைந்துள்ளது. விற்பனைகங்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர் ணயித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு விரிவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது மாருதி.

ஆப்பிரிக்காவில் அசெம்பிளி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு களையும் இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் மாருதி நிறுவன வெற்றியின் ரகசியம் இதுதானோ!

ஊழியர்களிடமிருந்து ஆலோசனை பெற்று அதைச் செயல்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 281 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது மாருதி சுஸுகி. ஊழியர்கள் நிறுவனத்துக்கு ஆலோசனைகளை அளித்து அதைச் செயல்படுத்தும்போது அவர்களுக்கு மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது.

rameshm@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x