Published : 07 Mar 2016 11:47 AM
Last Updated : 07 Mar 2016 11:47 AM

அதிகரித்த டிவிடெண்ட் வரி: அதிருப்தியில் நிறுவனர்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஒரு வழியாக முடிந்தது. நிறுவனங்களின் தலைவர்கள் பட்ஜெட் கருத்துகளை கூறுகிறார்களோ இல்லையோ இயக்குநர் குழு கூட்டத்தைக் கூட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் வரும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து டிவிடெண்ட் மீதான வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பட்ஜெட்டில் என்ன வரி என்பதற்கு முன்பாக ஒரு பிளாஷ்பேக்.

டிவிடெண்ட் விநியோக வரி

நிறுவனத்தின் லாபத்தை பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் (ஈவுத்தொகை) மூலமாக நிறுவனங்கள் வழங்குவது வழக்கம். நிறுவனத்தில் நிறுவனர்கள், சிறு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் அடிப்படையில் டிவிடெண்ட் வழங்கப்படும். இந்த டிவிடெண்டுக்கு தற்போது 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதாவது இந்த வரியை நிறுவனங்களே பிடித்து அரசிடம் செலுத்திவிடும். இந்த டிவிடெண்டை வாங்குபவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

காரணம், ஒரு நிறுவனத்தில் லட்சக்கணக்கான சிறுமுதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். டிவிடெண்டை வழங்கிய பிறகு அவர்களிடம் வரி வசூல் செய்ய முடியாது என்பதால் வழங்கும் போதே வரியை பிடித்துக்கொண்டு டிவிடெண்ட் வழங்குகிறார்கள். இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்குகிறது. ஒரு நிறுவனத்தில் 10 பங்குகள் வைத்திருப்பவர்களும் சில 100 ரூபாய்களை டிவிடெண்டாக பெறுகிறார்கள். அதேபோல சில நிறுவனங்களின் பங்குதாரர்கள் சில லட்சங்களில் டிவிடெண்ட் பெறுகிறார்கள்.

லட்சக்கணக்கான தொகை கிடைத்தால் கூட வரியில்லை என்ற நிலைமை இருப்பதால் இந்தத் தொகைக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் காரணமாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் பெறுபவர்கள் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பினால் சிறுமுதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 10 லட்ச ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் கிடைக்க வேண்டும் என்றால் சில கோடி ரூபாய்க்கு மேலான பங்குகளை வைத்திருக்க வேண்டும். இதனால் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் அதிக பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் விரைவில் டிவிடெண்ட் வழங்குவதை விரும்பினார்கள்.

இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இயக்குநர் குழுவை கூட்டி டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பல நிறுவனங்கள் இயக்குநர் குழுவுக்கான தேதியை அறிவித்திருக்கிறது. டிவிஎஸ் லேப், ஸ்வென் லைப் சயின்ஸஸ், சன் டிவி, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிவிடெண்ட் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. மேலும் பல நிறுவனங்கள் வெளியிட காத்திருக்கின்றன.

டிசிஎஸ், விப்ரோ, ஹெச்யூஎல், விப்ரோ, ரிலையன்ஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ரூபாயை டிவிடெண்டாக வழங்கியுள்ளன. அதேபோல கடந்த நிதி ஆண்டில் அஸிம்பிரேம்ஜி, முகேஷ் அம்பானி குடும்பங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை டிவிடெண்ட் மூலமாக பெற்றுள்ளன. தவிர ஜுன் ஜுன்வாலா உள்ளிட்ட தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பெரிய அளவில் டிவிடெண்ட் மூலமாக வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்த வரி குறித்து பிரபல தணிக்கையாளரிடம் கேட்டபோது, பெரும்பாலான நிறுவனங்களின் நிறுவனர்கள் இந்த வரி குறித்து அதிருப்தியில் இருக்கின்றனர். டிவிடெண்டை பெறும்போதே வரி செலுத்தப்படுகிறது. இருந்தாலும் மீண்டும் வரி என்பது இரட்டை வரி விதிப்பு முறைபோல இருக்கிறது என்று கருதுகின்றனர். ஆனால் இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பணக்காரர்களுக்கு எப்படியெல்லாம் கூடுதல் வரி விதிக்கலாம் என்ற அடிப்படையில் இந்த வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

தவிர எனக்கு தெரிந்த சிலர் 30 கோடி ரூபாய்க்கு பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். அவருக்கு டிவிடெண்ட் மூலமாக ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் கிடைக்கிறது. இந்த தொகைதான் அவருக்கு வருமானமாக இருந்தாலும், இந்த அத்தனை தொகைக்கும் அவர் வரி செலுத்த தேவையில்லை. இது போன்ற நபர்களுக்கு வரி விதிப்பதில் தவறில்லை என்றார்.

இதேபோல கடந்த 2007-ம் ஆண்டு டிவிடெண்ட் விநியோக வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. அப்போது பதறிக்கொண்டு நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்கின. ஆனால் அடுத்த ஆண்டு டிவிடெண்டுக்கு 15 சதவீதம் வரி செலுத்தின. அதேபோல இப்போதும் வரிகட்டுவதில் இருந்து தப்பிக்க பதறிக்கொண்டு டிவிடெண்ட் வழங்கினாலும் அடுத்த ஆண்டு என்ன செய்ய முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x