விநியோகச் சங்கிலியில் விரிசல்.. தடுமாறும் உலகம்… 

விநியோகச் சங்கிலியில் விரிசல்.. தடுமாறும் உலகம்… 
Updated on
3 min read

உங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறதா? உங்களுக்கு வர வேண்டிய பொருள்கள் தாமதமாக வருகின்றனவா? சமீபமாக நீங்கள் வாங்கும் பொருள்களின் விலை ஏறியுள்ளதா? நீங்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிப் பற்றாக்குறையால் கார் தயாரிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் வீடுகள் கட்டுவதற்கு மரங்கள் இல்லை. ரஷ்யாவில் இறைச்சிகளுக்கு, இங்கிலாந்தில் சோடா பானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. காலணிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொம்மைகள் என பல தரப்பட்டப் பொருட்களுக்கும் உலகளாவிய அளவில் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நெருங்கிவரும் சூழலில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.

என்ன காரணம்?

உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாகவே பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடும், விநியோகத்தில் தாமதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு. இரண்டாவது, சரக்குகளை ஏற்றுவதற்கான கன்டெய்னர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் தட்டுபாடு.

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவாகிய கரோனா வைரஸ்தான் விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டதற்கான ஆரம்பப்புள்ளி. கரோனா பரவல் தொடங்கியதும், சீனா அதன் எல்லைகளை மூடியது. இதனால், சீனாவிலிருந்து ஏனைய நாடுகளுக்கு செய்யப்பட்டுவந்த ஏற்றமதி பாதிப்புக்குள்ளானது.

உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகள் தங்களது தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள், உதிரி பாகங்களுக்கு சீனாவை பெரிதும் நம்பியிருக்கின்றன. உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களில் சுமார் 28.7% சீனாவில் தயாரிக்கப்படுகிறது. விளையாட்டு சாமான்கள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், வாகன உதிரி பாகங்கள், அழகு சாதனப் பொருட்கள் என 2.6 டிரில்லியன் டாலர் மதிப்பில் பலதரப்பட்டப் பொருள்களை சீனா ஆண்டுதோறும் உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது.

சீனாவில் நிறுவன விதிகளும், வரி விகிதங்களும் முதலீட்டாளர்களுக்கு சாதாகமாக இருப்பதால் ஏனைய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தயாரிப்பதற்கான தளமாக சீனாவை தேர்வு செய்கின்றன. அந்த வகையில், சீனா ‘உலகின் தொழிற்சாலை’யாகக் கருதப்படுகிறது.

பொதுவாக விநியோகச் சங்கிலி என்றால் உற்பத்தியாளரிடமிருந்து சரக்குகளை சில்லரை விற்பனையாளருக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்புதான் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், விநியோகச் சங்கிலி என்பது பின்னலான அமைப்பைக் கொண்டது. முதலில் உற்பத்தியாளருக்கு மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் பல்வேறு இடங்களில், நாடுகளிலிருந்து வர வேண்டும். இந்த மொத்த வலையமைப்பும்தான் விநியோகச் சங்கிலி எனப்படுகிறது. ஒரு உதாரணம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீனாவில் அசெம்பிள்தான் செய்யப்படுகின்றன. அதற்குரிய உதிரிபாகங்கள் உலகெங்கிலும் உள்ள 43 நாடுகளில் இருந்து வருகின்றன. இந்த அசெம்பிளி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் ஆப்பிள் நிறுவனம் அல்ல, இதைச் செய்வது ஃபாக்ஸ்கான் நிறுவனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், விநியோகச் சங்கிலி என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல்வேறு நாடுகள், பல்வேறு விதமான போக்குவரத்து முறைகள் சம்பந்தப்பட்டது.

கரோனா முதல் அலையின் தீவிரம் குறையத் தொடங்கிய சமயத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை உலக நாடுகள் படிப்படியாக தளர்த்தின. இயல்புநிலை இலேசாக திரும்பத் தொடங்கியதும் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது. ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவில் தொழிற்சாலைகள் தயாரிப்புகளை மேற்கொள்ள முடியவில்லை. காரணம், ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதால், தயாரிப்புக்குத் தேவை மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால், பொருள்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

கன்டெய்னர் தட்டுப்பாடு

உலகின் 90 சதவீத வர்த்தகம் கப்பல் போக்குவரத்தை சார்ந்து இருக்கிறது. பொருள்களுக்கான தேவை அதிகரித்தன் காரணமாக கப்பல் போக்குவரத்துக்கான செலவு உயர்ந்தது. உதாரணத்துக்கு, கரோனாவுக்கு முன்பு ஷாங்காயிலிருந்து லாஸ்ஏஞ்சலுக்கு ஒரு கன்டெய்னரை அனுப்பவதற்கான கட்டணம் 2,000 டாலர் என்றால், தற்போது அது 25,000 டாலராக உயர்ந்துள்ளது.

தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் கன்டெய்னர்களில் சரக்குகள் அனுப்பப்பட்டதால் துறைமுகங்களில் கன்டெய்னர்கள் நிரம்பி வழிந்தன. சரக்குகளை இறக்குவதற்கான ஊழியர்கள் பற்றாக்குறையால், கன்டெய்னர்களை இறக்குவது தாமதமானது. இதற்கிடையில் சூயஸ் கால்வாயில் ஒரு சரக்குக் கப்பல் சிக்கி போக்குவரத்தை முடக்கியது.

இப்படி ஒவ்வொன்றாக தொட்டுத்தொட்டு இறுதியில் சரக்குகளை ஏற்றுவதற்கான கன்டெய்னர்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கும் ஆரம்பப் புள்ளி சீனாதான். கரோனா தீவிரம் கொண்டிருந்த சமயத்தில் மாஸ்க் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை சீனா ஏற்றுமதி செய்தது. அப்படி ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பிய கன்டெய்னர்கள் திரும்பி வரவில்லை. சீனாவில்தான் அதிக அளவில் கன்டெய்னர்கள் தயாரிக்கப்படுகிறது. இப்போது அந்தச் தொழிற்சாலைகளில் தயாரிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் தற்போது சீனாவில் ஏற்பட்டிருக்கும் மின் தட்டுப்பாடு.

நிலக்கரி இருப்பு குறைவு காரணமாக விலை ஏற்றத்தை தொடர்ந்து சீனாவில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் கூடுதல் விலையில் நிலக்கரியை வாங்கத் தயாராக இல்லை. இதன் காரணமாக மின் உற்பத்தி பெருமளவில் பாதிப்படைந்து இருக்கிறது. மின் தட்டுப்பாடு காரணமாக சீனாவில் உற்பத்தி சுமார் 40 சதவீதம் குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக ‘உலகின் தொழிற்சாலை’ உற்பத்தி முடக்கத்தை சந்தித்திருக்கிறது.

நமது உள்ளூர் சந்தையில் திடீரென ஏதாவது ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு என்றால் அந்தப் பொருளுக்கான உதிரிபாகம் அல்லது மூலப்பொருள் சீனாவில் இருந்து வருகிறதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு எல்லா இடங்களிலும் சீனப் பொருள்கள் வியாபித்திருக்கின்றன. மின்னணு சாதனங்கள் தொடங்கி மருந்துத் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் வரையில் சீனாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவிடமிருந்து இந்தியாவின் இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவுக்கான வாய்ப்பு

எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இருக்கக்கூடாது கூடாது என்ற பாடத்தை காலம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. உலகளாவிய கூட்டாண்மை - (Global Partnership) பற்றி மறு மதிப்பீடு செய்து, குவாட் (QUAD) போன்ற புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் சீனாவைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களும் சீனா உருவாக்கிய வணிக அச்சுறுத்தலைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. உலகளாவிய உற்பத்தியாளர்களும் பெருந்தொற்றை தொடர்ந்து தங்களது விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியை சீனாவிலிருந்து மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, சீன அதிபர் ஜின்பிங் சீன தொழிற்துறை தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தபடி இருக்கிறார். இதனால் சீனத் தொழிற்துறை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அத்துடன் விநியோகச் சங்கிலி நெருக்கடியும் சேர்ந்திருக்கிறது. ஒருவகையில், இது இந்தியாவுக்கு உலக நாடுகளை தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in