Last Updated : 28 Mar, 2016 01:01 PM

 

Published : 28 Mar 2016 01:01 PM
Last Updated : 28 Mar 2016 01:01 PM

தொழில் போட்டி!

தொழில் போட்டிகள் பலவிதம். ஒரே தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் சிறப்பான தயாரிப்புகளை அளிப்பது, சிறந்த சேவை அளிப்பதன் மூலம் சந்தையைக் கைப்பற்ற முனையும்.

போட்டி நிறுவனம் அளிக்கும் சலுகையைக் கவனித்து அதற்கேற்ப புதிய சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர்வதும் ஒருவிதம்.

போட்டி நிறுவனங்களின் சந்தையை முற்றிலுமாக அழித்துவிட்டு ஏகபோக சக்ரவர்த்தியானவுடன் தாங்கள் நிர்ணயிக்கும் விலையில் சந்தையை ஆக்ரமித்து விலையை நிர்ணயிப்பதும் இன்னொருவிதம்.

இதெல்லாம் பழைய உத்திகள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தொழில்நுட்ப உதவியோடு எதிரி நிறுவனங்களை அழிக்கும் உத்திகள் உருவாகிக் கொண்டுதானிருக்கின்றன. அத்தகைய உத்தி ஒன்றைத்தான் ஓலா கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆப்ஸ் மூலம் வாடகைக்கார் சேவை அளிக்கும் ஓலா நிறுவனம் தனது போட்டி நிறுவனமான உபெர் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அழிக்க மேற்கொண்டதாக சொல்லப்படுகின்ற உத்திகளைப் பார்க்கும்போது, இப்படியெல்லாம் முடியுமா? இதைப் போன்று நிறுவனங்கள் செய்யுமா? என்ற ஆச்சர்யம் மேலோங்கியுள்ளது.

உபெர் நிறுவனத்தின் செயலியை ஓலா நிறுவன ஊழியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு உபெர் நிறுவன டிரைவர்களுக்கு முன்பதிவு செய்து அவர்கள் காத்திருக்கும்போது அவற்றை ரத்து செய்துள்ளதாக உபெர் குற்றம் சாட்டியுள்ளது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பதிவு செய்துள்ள எண்ணுக்கு தங்கள் நிறுவன டிரைவரால் தொடர்பு கொள்ள முடியாத தொலைபேசி எண்ணாக அவை இருந்தது என்று உபெர் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்குச் சென்று அங்கு பொருள்களை வாங்க முன்பதிவு செய்துவிட்டு பிறகு அவை டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அவை வேண்டாமென்று சொல்வதைப் போல ஓலா செய்துள்ளதாக உபெர் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை டெல்லியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேலான முன்பதிவுகள் இவ்விதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உபெர் குறிப்பிட்டுள்ளது.

இவ்விதம் முன்பதிவு செய்துவிட்டு ரத்தாகும் முன்பதிவுகளுக்காக தங்கள் டிரைவர்களுக்கு ஒரு குறி்ப்பிட்ட தொகையை ரத்து கட்டணமாக உபெர் அளிக்க வேண்டும். இதனால் ரூ. 4,96,164,780 அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உபெர் குறிப்பிட்டுள்ளது.

ஒலா நிறுவனம் மொத்தம் 4,05,649 தவறான அழைப்புகளை விடுத்து அவற்றை ரத்து செய்துள்ளதாக உபெர் தெரிவித்துள்ளது.

நிறுவனத்துக்கு வரும் மொத்த அழைப்புகளில் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இவ்விதம் ரத்து ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது செயலியில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி ஓலா இத்தகைய மோசடி அழைப்பு களை மேற்கொண்டதாக உபெர் குறிப்பிட்டுள்ளது.

ஓலா நிறுவன பணியாளர்கள் உபெர் நிறுவன அதிகாரிகள் போல போலியாக குறுஞ்செய்திகளை அனுப்பி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர்களை தங்கள் நிறுவனத்துக்கு ஈர்த்துவிட்டதாக உபெர் குற்றம் சாட்டியுள்ளது.

ஓலா, உபெர் நிறுவனங்களிடையேயான கடும் போட்டி தற்போது நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.

இரு நிறுவனங்களுமே கடந்த சில வாரங்களாக விலை குறைப்பு என்ற விளம்பர யுத்தத்தை நடத்தின. ரூ. 6-க்கு ஒரு கி.மீ. தூர பயணம் என இரண்டுமே முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டன.

இரு நிறுவனங்களுமே தங்களுக்கு எந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்ற விவரத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலா நிறுவனம் தங்களுக்கு இந்தியச் சந்தையில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் இருப்பதாகத் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 சதவீதமாக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆறு மாதங்களில் 50 சதவீத அளவுக்கு உயர்ந்ததாக உபெர் தெரிவித்தது. ஒரு மாதத்தில் ஓலாவிடம் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெறுவோம் என்று உபெர் நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத் தலைவர் எரிக் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டி வெளியான அடுத்த நாளே ஓலா நிறுவனம் மைக்ரோ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது உபெர் நிறுவனத்தின் பெருமளவு வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளதாக ஓலா நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் ரகுவேஷ் ஸ்வரூப் தெரிவித்தார்.

இந்தியாவின் 102 நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது ஓலா. இந்நிறுவனத்தில் ஜப்பானின் சாஃப்ட்பேக் 21 கோடி டாலர் வரை முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான உபெர் நிறுவனம் இந்தியாவில் 22 நகரங்களில் செயல்படுகிறது. இந்தியாவின் முன்னணி 10 நகரங்களிலிருந்துதான் இரு நிறுவனங்களுக்கும் 90 சதவீத வருமானம் கிடைக்கிறது.

இரு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது வருமானத்தைப் பெருக்க தீவிரம் காட்டும் அதேசமயத்தில் எவ்வளவு வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்ற விவரத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. நுகர்வுப் பொருளாக இருந்தால் அது எந்த அளவுக்கு விற்பனையாகிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இரு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை எந்த தனியார் நிறுவனமும் முயற்சிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்துக்கு உள்ளனர் என்றால் அதை அவை மறுக்க முடியும்.

தொழில் போட்டியை சமாளிக்க இத்தகைய மலினமான உத்திகளைக் கையாளும்போது நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர் மத்தியில் தகர்ந்து போகும் என்பதை நிறுவனங்கள் உணர வேண்டும்.

இரு நிறுவனங்களுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாதவை என்பதால் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இவற்றில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இவை தகவல் அளித்தாக வேண்டும். அப்போது இவற்றின் உண்மை நிலை வெளிவரும்.

இந்தியாவில் ஓலாவை எதிர்த்து களமிறங்கியுள்ள உபெர், அமெரிக்காவில் லிஃப்ட் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது. சீனாவில் டிடி குயைடி ஜாயின்ட் கம்பெனி எனும் நிறுவனத்தையும், தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கிராப் டாக்ஸி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த டிசம்பரில் இம்மூன்று நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது ஓலா. இவை ஒன்றிணைந்து உபெரை எதிர்க்கின்றன.

ஓலாவுக்கான செயலி தொழில்நுட்பத்தை அளிப்பது ஏஎன்ஐ டெக்னாலஜீஸ் நிறுவனமாகும். இந்நிறுவனமும் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனம் உபெர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது டெல்லி அரசு விதித்துள்ள தடையை மீறி அங்கு டீசல் கார்களை உபெர் இயக்குவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பலில் சண்டீகரைச் சேர்ந்த ஜக்னூ நிறுவனம் தனது டிரைவர்கள் பற்றிய தகவலை ஓலா திருடிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்தியாவில் வாடகைக் கார் சந்தை சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாகும். இதில் முறைசார்ந்த நிறுவனங்களின் சந்தை 6 சதவீத அளவுக்கே உள்ளது.

இந்தியாவில் உபெரை ஓரங்கட்ட ஓலா கடைபிடித்துள்ள மோசமான உத்தி நீதிமன்றத்தில் நிரூபணமானால் ஓலாவின் மீதான நம்பகத்தன்மை குலைந்துபோகும்.

குறைந்த கட்டணத்தில் சேவை என்ற நிலை மாறி இதுபோன்ற உத்திகள் வியாபாரத்தில் தாற்காலிக வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவுமே தவிர, நீண்ட கால அடிப்படையில் உதவாது.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x