Published : 30 Nov 2015 04:35 PM
Last Updated : 30 Nov 2015 04:35 PM

வணிக வீதிக்கு வயது 2

தமிழ் இந்து நாளிதழ் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாளிதழ் தொடங்கியதிலிருந்து வர்த்தகத்துக்கு முழுப் பக்கம் ஒதுக்கி பங்குச் சந்தை, வர்த்தகம், ஏற்றுமதி, அந்நியச் செலாவணி உள்ளிட்ட அனைத்துச் செய்திகளை முழுமையாகவும் அளித்து வருகிறோம்.

இவை அனைத்தையும் மீறி வாசகர்களின் தேடல் வர்த்தகத்துக்கு தனி இணைப்பு தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. முதலாமாண்டு வாசகர் திருவிழாவில் பலரும் இதை வலியுறுத்தினர். இதன் விளைவாக கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் திங்கள்கிழமைதோறும் இலவச இணைப்பாக `வணிக வீதி’ அறிமுகமானது. அன்றாட வர்த்தகச் செய்திகளைத் தாண்டி வணிகம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்டுரைகள் இடம் பெற்றன.

பிரபலமானவர்கள் உதிர்த்த வர்த்தகம்/வணிகம் சார்ந்த சுய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள் `வெற்றி மொழி’யாக இடம்பெற்றன. இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க `துணிவே தொழில்’ என்ற தொடர் பெருமளவு வெற்றி பெற்றது. கடுமையாக உழைத்து ஈட்டிய பணத்தை உரிய வகையில் முதலீடு செய்ய வழிவகுத்த `முதல் செலவு’ தொடர் குடும்பத் தலைவர் மட்டுமல்ல குடும்பத் தலைவிகளுக்கும் பேருதவியாக அமைந்தது. வள்ளுவர் காட்டிய குறள் நெறியில் வணிக வாய்ப்புகளை அடையாளம் காட்டும் `குறள் இனிது’ பகுதி இன்றளவும் தொடர்கிறது.

தமிழகத்தில் பல பகுதிகளில் சுயமாக தொழில் தொடங்கி இன்று வெற்றிகரமாக வலம் வரும் தொழில் முனைவோரை அடையாளம் காட்டும் பகுதியாக `தனித்து ஜெயித்த சாதனையாளர்கள்’ பகுதி தொடர்ந்து வெளிவந்து புதிய தொழில் முனைவோர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. இதுவரையில் இப்பகுதியில் 39 தொழில் முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது திறமைக்கு அங்கீகாரம் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகி பெரும்பாலும் அறியப்படாத பல தொழில்முனைவு, சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்கள் பற்றிய குறிப்பு `புத்தக அலமாரி’ பகுதியில் வெளியாகி பலரிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தூண்டியுள்ளது.

வாராந்திர வர்த்தக நிகழ்வுகளின் முக்கிய தாக்கம் தேசிய, சர்வதேச நிகழ்வுகள் அனைத்தும் முகப்புக் கட்டுரையாக வெளியாகி பலரையும் ஈர்த்ததில் வியப்பில்லை. நமது வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட மோட்டார் வாகனங்கள் பற்றிய பகுதி தேவை என்ற கோரிக்கை மேலிடவே தற்போது ஒரு முழு பக்கமும் (ஜூலை 13, 2015 முதல்) வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள், கார், மோட்டார் சைக்கிள் பராமரிப்புக்கான பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் சாகச பயணங்கள், ஆட்டோமொபைல் கண்காட்சிகள் உள்ளிட்ட தகவல்களோடு வெளியாகிறது.

எந்த ஒரு படைப்புமே வாசகர்களின் பங்கேற்பு இல்லாவிட்டால் முழுமையடையாது என்பதால் வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்வதற்கு `வாசக சாலை’ பகுதி வழியேற்படுத்தியுள்ளது. ஓராண்டில் ஏறக்குறைய 53 வாரங்கள் வெளியான `வணிக வீதி’, தனது பயணத்தை இரண்டாம் ஆண்டில் தொடர்கிறது உங்கள் ஆதரவுடன்…

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x