Last Updated : 28 Aug, 2017 10:24 AM

 

Published : 28 Aug 2017 10:24 AM
Last Updated : 28 Aug 2017 10:24 AM

வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?

வங்கி லாக்கர் மிகவும் பாதுகாப்பானது என்கிற எண்ணம் நமக்கு இருக்கிறது. ஆனால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளவை திருடு போனாலோ அல்லது பாதிப்படைந்தாலோ என்ன செய்வது? சமீபத்திய வழக்கு ஒன்றில் இந்த கேள்வி உருவானது. லாக்கரில் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தவிர வங்கிகள் கூடுதல் தொகையை டெபாசிட் செய்ய வலியுறுத்தும். இந்த நிலையில் வங்கி லாக்கர் குறித்து வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

வங்கி லாக்கரை வாங்கும் போது, லாக்கருக்கு வங்கிகளை பொறுப்பாக்க முடியாது என்கிற அடிப்படையிலேயே பெறுகிறோம். லாக்கரில் என்ன பொருட்களை வைப்போம் என்பதும், அதன் மதிப்பு எவ்வளவு என்பது வங்கிகளுக்கு தெரியாது. அதனால் லாக்கரை கொடுக்கும் வங்கிகள் அதற்கு பொறுப்பேற்க தேவையில்லை என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் அடிப்படையிலும் லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பேற்க தேவையில்லை. ஒருவேளை லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் திருடு போனாலோ அல்லது பாதிப்படைந்தாலும் கூட வங்கிகள் பொறுப்பேற்காது. ஆனால் இயற்கை பேரிடர் அல்லது இயற்கையான சூழல் காரணமாக பல லாக்கர்கள் பாதிப்படையும் பட்சத்தில், அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இந்த சூழலில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆராயப்படும். இந்த விசாரணைக்கு வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை இதில் பணியாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், லாக்கரை எடுத்தவருக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது என்றும் சரவணன் கூறினார்.

சில விலக்குகள்

வங்கிகளின் சேவை குறைபாடுகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். அப்போது வங்கிகள் சரியான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை அல்லது சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

மேலும் லாக்கர் தீ மற்றும் தண்ணீர் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பானது என்று சொல்லிய பிறகு லாக்கரை வாடகைக்கு எடுக்கிறோம் . ஒருவேளை தீ மற்றும் தண்ணீரால் பாதிப்பு வருகிறது என்னும் பட்சத்தில் இழப்பீடு கோரலாம். வங்கி குறை தீர்ப்பு மையத்தில் இது குறித்து முறையீடு செய்யலாம். ஒரு வேளை இங்கும் நீதி கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜான்சி கூறுகிறார்.

காப்பீடு எடுக்கலாம்

லாக்கர் திருட்டு மற்றும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள காப்பீடு எடுப்பது சிறந்த வழி. காப்பீட்டு நிறுவனம் நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு உங்கள் லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்ட பிறகு பிரீமியத் தொகை நிர்ணயம் செய்யும். ஒரு வேளை இழப்பு ஏற்படும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக லாக்கரில் இருக்கும் தொகையில் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை பிரீமியத்தொகை இருக்கும். பொருட்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது லாக்கரில் என எங்கிருந்து பாதிப்படைந்தாலும் க்ளைம் கிடைக்க கூடிய பாலிசிகள் உள்ளன. இந்த வகை பாலிசிகளுக்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஹெச்டிஎப்சி எர்கோ, டாடா ஏஐஜி, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கத்துக்கு காப்பீடு வழங்குகின்றன.

வீடு மற்றும் லாக்கரில் இருந்து பாதிக்கப்பட்டாலும் காப்பீடு இழப்பீடு கோரலாம் என்றாலும், லாக்கரில் இருக்கும் போது பாதிப்படைந்தால்தான் இழப்பீடு பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு நீங்கள் நகையை வீட்டில் வைத்திருக்கிறீர்கள். 30 நாட்களுக்கு மேல் வீடு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதன் பிறகு நகை திருடு போனால் கிளைம் கிடைக்காது. இந்த பிரச்சினை லாக்கரில் இல்லை.

நகை சம்பந்தமான சில பாலிசிகளில் வீடு, லாக்கர், அணிந்திருக்கும் ஆபரணங்கள் போன்ற வகைகளில் பாதிப்படைந்தாலும் இழப்பீடு பெறலாம். தவிர மழை, வெள்ளம், பூகம்பம், கொள்ளை மற்றும் தீ உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x