Published : 26 Mar 2018 11:11 AM
Last Updated : 26 Mar 2018 11:11 AM

பறப்பதிலும் சிக்கலா..

இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்களின் 11 ஏர்பஸ்320 விமானங்களின் சேவையை மார்ச் 12 முதல் நிறுத்தச் சொல்லியிருக்கிறது விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆணையமான டிஜிசிஏ. நடுவழியில் நிகழ்ந்த இன்ஜின் கோளாறுகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட விமானங்களை டிஜிசிஏ தடை செய்திருக்கிறது.

குறைந்த கட்டணத்தில் சேவை அளித்துவரும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களுக்கு இது பெருத்த அடியாக மாறியுள்ளது. இண்டிகோ 488 சேவைகளையும், கோ ஏர் 138 சேவைகளையும் ரத்து செய்துள்ளது. ஆனால் பிரச்சினை இத்தோடு முடிந்த பாடில்லை.

கடந்த வாரம் பெங்களூரு-டெல்லி வழியில் இயக்கப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ்320 விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் சேவையிலிருந்து தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலக்கிக்கொள்ளப்பட்ட எல்லா விமானங்களுக்கும் ஒரு பொதுவான தன்மை என்னவென்றால் இவை அனைத்தும் நியோ வகை இன்ஜினை கொண்டுள்ளன.

இதனைத் தயாரித்து அளித்திருப்பது அமெரிக்காவின் யுனைடெட் டெக்னாலஜீஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான பிராட் அண்ட் விட்னீ (Pratt & Whitney) நிறுவனமாகும்.

இந்தப் பிரச்சினை ஏதோ இன்று புதிதாக உருவாகி வந்த ஒன்றல்ல. நியோ வகை இன்ஜினை பிராட் அண்ட் விட்னீ நிறுவனத்திடமிருந்து இண்டிகோ வாங்கிய மார்ச் 11, 2016-லியே பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. கியர்ட் டர்போ ஃபேன் தொழில்நுட்பத்தில் இந்த இன்ஜின்கள் செயல்படுகின்றன.

மற்ற இன்ஜின்களைவிட 16 சதவீதம் எரிபொருள் மேம்பாடு, இன்ஜினில் எழும் சத்தம் 75 சதவீதம் குறைவு ஆகியவை இந்த இன்ஜின்களின் சிறப்பம்சமாக சொல்லப்பட்டன. ஆனால் மிக தாமதமாக இன்ஜின் இயங்க ஆரம்பித்தல், இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பைலட்களுக்கு மென்பொருள் வழியாக தொடர்ச்சியாக தகவல் வருதல் என பிரச்சினை தொடங்கியது.

பின்பு நடுவானில் இன்ஜின் இயக்கம் நிற்க ஆரம்பித்தது. டிஜிசிஏவின் தரவுகளின்படி செப்டம்பர் 15,2017 வரை நியோ இன்ஜின் பொருத்தப்பட்ட இண்டிகோவின் ஏர்பஸ்320 ரக விமானங்களில் 69 முறை இன்ஜின் கோளாறுகள் நடந்துள்ளன. 18 மாதங்களில் 69 முறை கோளாறு என்றால் சராசரியாக வாரத்துக்கு ஒருமுறை கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே இருந்துவரும் இந்த சிக்கலை இண்டிகோ கண்டும்காணாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. டிஜிசிஏவின் இந்த நடவடிக்கையும் மிகத் தாமதமான ஒன்றுதான்.

நியோ என்ஜின் பொருத்தப்பட்டுள்ள விமானங்களின் பாதுகாப்பு குறித்து இதன்பின்னும் டிஜிசிஏ கவனம் செலுத்தவில்லை. ஆனால் யஷ்வந்த் செனோய் என்ற வழக்கறிஞர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த வகை இன்ஜின் பொருத்தப்பட்ட விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபிறகு நியோ என்ஜினின் பாதுகாப்பு குறித்து இப்போது டிஜிசிஏவிடம் அறிக்கை கேட்டிருக்கிறது நீதிமன்றம்.

மேலும் சிக்கல்கள்

இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் தங்களிடமுள்ள உதிரி பாகங்களை வைத்து நியோ இன்ஜினை சரிசெய்யக்கூடாது என டிஜிசிஏ தெரிவித்திருப்பதால் பிராட் அண்ட் விட்னீ நிறுவனம் இந்த இன்ஜின்களைத் திரும்பப்பெற்று சரிசெய்ய இருக்கிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இவை சரிசெய்யப்பட்டு சேவை ஆரம்பிக்கும் என பிராட் அண்ட் விட்னீ தெரிவிக்கிறது.

டிஜிசிஏ ஏற்கெனவே வழங்கி இருக்கும் அட்டவணைப்படி தொடர்ச்சியாக ஒரு மாதம் சேவை வழங்கப்படாவிட்டால் அந்த கால அட்டவணையை டிஜிசிஏவால் ரத்து முடியும். எப்படி இருந்தாலும் தனது தொடக்க கால அலட்சியங்களுக்கான பலனைத்தான் இண்டிகோ இப்போது அனுபவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x