Last Updated : 02 Mar, 2018 09:04 AM

 

Published : 02 Mar 2018 09:04 AM
Last Updated : 02 Mar 2018 09:04 AM

வணிக நூலகம்: தனி மனித சுதந்திரம்- உடன்படிக்கையும் வழிகாட்டுதலும்

னிமனித சுதந்திரம் என்பது சொல்லித் தெரிவது அல்ல. உள்ளே ஊறித் திளைத்து எழுவது. ஒவ்வொன்றிற்கும் அடிமையாக இருக்கும் சிலர் குழப்பங்களைக் கண்டு அனுமானங்களைக் கக்கி மிகச்சிறந்ததை தவறவிட்டு எதையாவது தேடிக்கொண்டு இருப்பார்கள். தனிமனித சுதந்திரம் மற்றும் குழப்பச் சூழ்நிலைகள் நூலிழையில் வேறுபடும். குழப்பச் சூழ்நிலை என்னும் கடைசிப் படிக்கட்டில் இருந்து மேலே சென்று உச்சியைத் தொடுவது தான் தனி மனித சுதந்திரம். அதைக் காட்ட முடியாது. ஆனால் உணர முடியும். அவ்வாறு உணர்வதற்கு சில உடன்படிக்கைகள் தேவைப்படுகின்றன. DON MIGUEL RUIZ என்ற நூல் ஆசிரியர் மிக அழகாகத் தன்னுடைய சிறிய புத்தகத்தில் வழிகாட்டுதலையும், தனிமனித சுதந்திரத்தை அடைவதற்கு செய்து கொள்ள வேண்டிய உடன்படிக்கைகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

தனிமனித வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மட்டும் அல்ல மன வளர்ச்சியும், குழப்பங்களையும் படபடப்புகளையும் விலக்குதலும் ஆகும். அவ் வாறு செய்வதற்கு நான்கு வகையான உடன்படிக்கைகளை இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நூல் ஆசிரியர் விரிவாக கூறுகிறார். அந்த சுருக்கத்தின் தொகுப்பை கீழே காணலாம்.

வார்த்தைகளில் அப்பழுக்கற்ற தன்மை

நடத்தையிலும், பேச்சிலும் தேவையற்றவைகளைத் தவிர்த்தல்

அனுமானங்களை விலக்குதல்

மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துதல்

வார்த்தைகளில்

அப்பழுக்கற்ற தன்மை

சரித்திரத்திலும், இதிகாசங்களி லும் சிலரைப் பற்றி கூறும் பொழுது "சொன்ன சொல் காத்த தூயோன்" என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். ஏனென்றால் அதுபோன்ற சில ஆளுமைகள் வார்த்தையில் வரம்பும், பேச்சில் தெளிவும் வெளிப்படுத்துதலில் நாகரிகமும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள். அவ்வாறு பெறுவது என்பது மிகப்பெரிய அடைய முடியாத கடினமான காரியம் ஆகாது. ஏனென்றால் வதந்திகளை பரப்புவதும். பொய்களைத் தூவுவதும், பொய்யான உறுதிமொழிகளும், வார்த்தைகளில் பிரச்சினைகளை உருவாக்குவதும் தவிர்த்தால் நச்சுத் தன்மை விலகும், நேர்மை நெறிப்படும். வார்த்தைகள் அப்பழுக்கற்றதாக இருந்தால் மற்றவர் மனதில் நம்பிக்கை துளிர்க்கும். அந்த நம்பிக்கை தனிமனித சுதந்திரத்திற்கு உரமாகும். ஏனென்றால் எப்பொழுதும் மாற்றி பேசி குறை கூறி குற்றம் கண்டு திரித்து பேசி, வார்த்தைகளை நஞ்சாக்கும் தன்மை அற்று அப்பழுக்கற்ற தன்மை ஓங்கும். அவ்வாறு மாற்றம் ஏற்படும் பொழுது குப்பைகள் காலியான கோணிப்பை போல மனதும் லேசாகிவிடும். தனிமனித சுதந்திரம் இறகடித்துப் பறக்கும் என்று நூலாசிரியர் விளக்குகிறார். வார்த்தைகள் மற்றவர்களை ஊனமாக்குவதும், காயப்படுத்துவதும் தெரிந்தும் அதைச் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.

நடத்தையிலும், பேச்சிலும்

தேவையற்றவைகளைத் தவிர்த்தல்

மற்றவர்கள் நம்மிடம் கூறும் எந்தச் சொற்களும் அந்த அந்த மனிதர்களின் மனப்பாங்கும், அவர்களுடைய எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். எனவே, யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே எடுத்துக் கொண்டு ஆழ்மனதில் கொண்டு புதைப்பதைத் தவிர்த்து மேல் மனதில் மறுபரிசீலனை செய்து தள்ள வேண்டியவைகளை தள்ளி கொள்ள வேண்டியவைகளைச் சரியான முறையில் எடுத்துக் கொள்வது குழப்பங்களைத் தவிர்த்து அடிமைத் தனத்தைக் குறைத்து சுதந்திரத்திற்கு வழிகாட்டும்.

சிலர் சுட்டிக்காட்டும் எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் ஆகியவை சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு பாங்கான பண்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டால் அவைகளை நினைத்து குழம்பி குறைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கூறிய கருத்துகள் சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொண்டு, தேவையற்றதாக இருந்தால் தனித்து நிறுத்தி பாகுபடுத்தி வேண்டியவை கொள்தல் மிகவும் சிறந்தது.

நாம் யார் என்றும், நாம் எதற்கு பொறுப்பு இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்வது மனித வாழ்க்கையில் மிகவும் குழப்பமான பகுதியாகும். அடுத்தவர்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்வதைத் தவிர்த்து அவர்களின் கருத்துக் கூறலை சரியான முறையில் உள்வாங்கி தேவையானவைகளை வடிகட்டி எடுத்துக் கொள்வது தனிமனித சுதந்திரத்திற்கு அடுத்த படிக்கட்டு ஆகும். பொறுப்புகளைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் தேவையானவைகளைச் சரிவர ஏற்றுக் கொள்ளும் வளர்ச்சி ஆகியவை தனிமனித சுதந்திரத்தின் கோட்பாடுகளாகும். குழப்பங்களையும் படபடப்புகளையும் தவிர்த்து தொலைநோக்கு பார்வையில் இலக்கை அடைய மேலே கூறியவை பெரிதும் உதவும்.

அனுமானங்களைத் தவிர்த்தல்

அனுமானங்கள் குழப்பங்களைக் கூட்டும். அடுத்தவர் என்ன நினைக்கிறார், ஏன் செய்கிறார் என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபோது அனுமானங்கள் நிகழ்வுகளின் தன்மைகளை கூட்டுமே தவிர குறைக்காது. ஒவ்வொருவருடைய உணர்வுகளுக்கும் உந்துதலுக்கும் வெவ்வேறு வகையான காரணங்களும் காரணிகளும் இருக்கலாம். அவைகளைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் தன் முயற்சியில் தேவையானவைகளை இணைத்து யானையை தொட்டுப்பார்த்த சிலரைப் போல இருளில் மூழ்கித் தவிப்பதைத் தவிர்க்கலாம். உலகின் பார்வையும், ஒவ்வொருவரின் பார்வையும் மாறுபட்டவை. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாக அனுமானங்களை வளர்ந்து கொள்ளக்கூடாது. அடுத்தவர் பற்றிய அவசர முடிவுகளோடு மாறுபட்ட புரிதலும் குழப்பத்தைக் கூட்டும். ஒவ்வொருவருக்கும் இடையில் நிகழக்கூடிய உறவுகளை பலவீனப்படுத்தும். சில நேரங்களில் நம்முடைய முடிவுகள் நிகழ்காலத்திற்கு ஒத்துப்போகாமல் இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் அனுமானங்களின் அடிப்படையில் எடுக்கக்கூடிய முடிவுகள் தவறுக்கு வழிகாட்டும். அடிமனதில் தோன்றக் கூடிய புத்திசாலிதனமும், பொது அறிவும் இணையும் பொழுது உள்ளுணர்வுகள் கூறுவதை வெளி நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி அறிவுபூர்வமாக இணைத்துப் பார்த்தால் அனுமானங்கள் காணாமல் போகும். தனிமனித சுதந்திரம் என்பது சரியான, முறையான அணுகுமுறைகள் மூலம் தவறுகளை தவிர்த்து அனுமானங்களைப் புறம் தள்ளி நேர்மறையான எண்ணங்களாக மாற்றுவது ஆகும்.

மிகச்சிறந்த செயல்பாட்டை

வெளிப்படுத்துதல்

சில நாட்களில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். சில நாட்களில் செயல்பாடுகள் குறைபாடாக இருக்கும். எப்பொழுதும் சிறந்ததையே செய்வது முடியாத செயல். மனித முயற்சியில் நிறைகளும், குறைகளும் குலுங்கிக் கூத்தாடும். நிறைகளை நேர்மறை எண்ணங்களோடு பொருத்தி சரியான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பொழுது அடிமைத்தனம் அற்றுப்போகிறது, சுதந்திரம் கூட வருகிறது. சரியான முறையான நேர்மையான முயற்சிகள் சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து வருந்துவதோ குறைபட்டுக் கொள்வதோ தனிமனித சுதந்திரத்தைத் தவிர்க்கும்.

பொதுவாக எப்பொழுதும் செய்யக்கூடிய செயல்களில் நிறைகளைக் கூட்டி குறைகளைத் தவிர்த்தால் தோற்றுவிடுவோமோ என்ற பயமோ, சரிவர செய்யவில்லை என்ற அடிமை உணர்ச்சியோ தவிர்க்கப்படும். எனவே அதுபோன்ற நேரங்களில் செய்யும் செயல்கள் மிக சிறந்தவைகளாக இருப்பதாகப் பார்த்துக்கொள்வது சுதந்திரத்தின் தாக்கத்தைக் கூட்டும்.

உளவியல் மற்றும் மேலாண்மை சார்ந்த இந்த உடன் படிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கு நிச்சயம் வழிகாட்டும் என்று நூல் ஆசிரியர் பல இடங்களில் எடுத்துக்காட்டோடு கூறியிருக்கிறார்.

முன்னேற துடிப்பவர்களும், முன்னேற்ற பாதையில் மற்றவர்களை அழைத்து செல்பவர்களும் இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாமே. இதன் மூலம் உங்கள் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படாதது மட்டும் அல்ல முழுமை பெறும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x