Published : 07 May 2018 11:33 AM
Last Updated : 07 May 2018 11:33 AM

ஒரே தேசம், ஒரே விலை: கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டபோது மத்திய அரசின் கோஷம் `ஒரு நாடு, ஒரே வரி’ என்பதாக இருந்தது. இது இப்போது வேறு வடிவில் ஆட்டோமொபைல் துறையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு தேசம், ஒரே விலை என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் ஒரே விலையில் கார்களை விற்க கார் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுவாக கார்கள் அறிமுகப்படுத்தும்போது டெல்லி விற்பனையக விலை, மும்பை விற்பனையக விலை, தமிழ்நாடு விற்பனையக விலை என ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ப விலையில் மாறுபாடு ஏற்படும். இதற்குக் காரணம் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் மாநில வரி விதிப்பைப் பொறுத்தே உள்ளூர் விற்பனையக விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான வரி விதிப்பு அமலில் உள்ளது. இதனால் கார்களின் விலையிலும் மிகப் பெருமளவு மாறுதல் இருப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு ஒரே தேசம், ஒரே விலை என்ற அடிப்படையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காரை எங்கு வாங்கினாலும் ஒரே விலை இருக்குமாறு உற்பத்தி நிறுவனங்கள் பார்த்து வருகின்றன.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோடா யாரிஸ் மற்றும் ஃபோர்டு பிரீஸ்டைல் ஆகிய கார்கள் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சொகுசு கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் கார்கள் விற்பனை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தின. தற்போது மக்கள் அதிகம் வாங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இத்தகைய நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

சாலை வரி மற்றும் வாகன பதிவுக் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுவதால் விற்பனையில் சிறிதளவு மாற்றம் இருக்கும். ஆனால் முன்பு போல அதிக வித்தியாசம் இருக்காது என்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x