Last Updated : 07 May, 2018 11:33 AM

 

Published : 07 May 2018 11:33 AM
Last Updated : 07 May 2018 11:33 AM

சபாஷ் சாணக்கியா: எல்லாப் புகழும்...

"என்னால் முடியும் எனச் சொல்வது தன்னம்பிக்கை; என்னால் மட்டும் முடியும் எனச் சொல்வது கர்வம் " என்கிற ரீதியில் நடிகர் சூர்யா பேசும் வசனத்தைக் கைபேசி அழைப்புமணி ஓசையாகக் கேட்டு இருப்பீர்கள். உண்மை தானே?ஆடம் ஃபியாட்டே எனும் ஆங்கிலேய நீச்சல் வீரர் சொல்வது போல, இந்தத் தன்னம்பிக்கைக்கும் இறுமாப்பிற்கும் இடையேயான கோடு மிக மெல்லியதாயிற்றே!

தம்பி, தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வண்டி ஸ்டார்ட்டே ஆகாது. ஆனால், கர்வம் வந்து விட்டாலோ, கன்னாபின்னாவென்று தறிகெட்டு ஓடும்; மோதி விபத்து ஏற்பட்டுத் தானேயப்பா நிற்கும்?

சிலருக்கு சாதாரண வெற்றி பெற்ற உடனேயே அது தலைக்கு ஏறி விடும். அதன் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் என்ன? அதைப்பற்றியே பேச வேண்டியது, அவ்வெற்றியைக் கொண்டாட வேண்டியது என அந்தக் கதைதான் தொடரும். அட, இது என்ன பெரிதா, நம்மைப் போல மற்றவர்கள் எவ்வளவோ பேர்கள் உலகத்தில் இதைச்செய்து இருப்பார்களே என நினைக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களால் எப்படி அடுத்த பெரிய வெற்றியை அடைய முடியும்? நாம் செய்ய வேண்டியது, சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது எனும் உந்துதல் இருந்தால் தானே ஒருவர் மேன்மேலும் உயர முடியும்?

`இறுமாப்புக்காரன் தன்னை குறையற்றவன் என்றே கருதிக் கொள்வான். கர்வத்தினால் விளையும் முக்கியமான கேடு இதுவேயாகும். மேலும் அது வாழ்க்கையில் இன்றிருப்பதை விட நாளை சிறந்தவனாக வேண்டும் எனும் முயற்சிக்கு குறுக்கே வந்து நிற்கும்!’ என்கிறார் லியோ டால்ஸ்டாய் எனும் ரஷ்ய எழுத்தாளர்!

பல சமயங்களில், நாம் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடித்த பின்பு, அடுத்த காரியத்தைச் சொதப்பி விட்டால், கண்திருஷ்டி பட்டு விட்டதாகச் சொல்வதுண்டு. ஒரு வகையில் யோசித்துப் பார்த்தால், வெற்றி கண்டவர்க்கு வரும் மெத்தனம், கவனக்குறைவு போன்றவையே அவர்களது தோல்விக்குக் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது.

`என்னைக் கேட்டால் அதிகமான தொழில் முனைவோர் வேறெந்த குணக்கேட்டை விடவும் , கர்வத்தினால் தான் தடம் புரண்டு விடுகின்றனர் என்பேன்’ என ஹார்வே மாக்கே எனும் அமெரிக்கத் தொழிலதிபர் சொல்வது உண்மை தானே? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது உலக நியதி. இதை ஞாபகம் வைத்துக் கொண்டு விட்டால், இந்தத் தம்பட்டம் அடித்துக் கொள்வது குறைந்து மேன்மேலும் முன்னேறுவது சாத்தியமாகுமல்லவா?

`நாம் நமது தர்மம், எளிமை, வீரம், ஆன்மீக ஞானம், அடக்கம்,நேர்மை போன்றவை குறித்து பெருமை கொள்ளக் கூடாது; இவற்றில் நம்மிலும் சிறந்தவர்கள் பலர் இவ்வுலகில் இருப்பார்கள்! ' என்கிறார் சாணக்கியர்.

என்ன, அவர் சொல்வது ஒவ்வொன்றுமே சரி தானே? யாராவது, `நான் நிறையத் தர்மம் செய்து விட்டேன்’ என்று சொல்லிக் கொள்ள முடியுமா? `நான் எளிமையானவன்’ எனும் நினப்போ, பேச்சோ வந்தாலே அக்கணமே எளிமை போச்சே! சிலர், `எனக்குத் தற்பெருமை பேசுவதே பிடிக்காது’ என்று பேசித் தற்பெருமை அடித்துக் கொள்வதைக் கேட்டு, நீங்களும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.

வீரர்கள் கதையும் அதேதான். போரோ, விளையாட்டோ புதுப்புது சாதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கும். அதே போல, தான் முழு ஞானி என்று யாரால் சொல்ல முடியும்? எல்லாமறிந்தவர் யாருமில்லையே?

`அடக்கத்திற்கு அடிப்படையே, அடக்கம் அல்லவா ? `நான் அடக்கமானவன்’ எனும் எண்ணமே ஒரு அகந்தைதானே? அடுத்தது இந்த நேர்மை. அண்ணே, நேர்மையாக இருப்பது அவசியமா,அலங்காரமா? அப்படி இருப்பதுதானே நியதி,நியாயம்? அதில் கர்வம் வந்தால், அது குறையும் ஆபத்து வந்து விடாதா?

நம்ம இசைப்புயல் ரஹ்மானின் வளர்ச்சியைப் பாருங்கள். தன் தந்தைக்கு கீபோர்டு வாசிக்கும் உதவியாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், 1987ல் விளம்பரப் படங்களுக்கு ஜிங்கில்ஸ் அமைத்துக் கொடுத்துப் பாராட்டுப் பெற்றார். 1992ல் சின்னச் சின்ன ஆசையுடன் `ரோஜா’ பெரிய பெரிய வெற்றி கண்டது. மனிதன் மயங்கவில்லை. 1993-ல் ஜென்டில்மேன்.பல பாடல்களின் பாராட்டுகளிலும் இறுமாப்பு கொள்ளவில்லை.

1998ல் சைய்யா சைய்யா என்று தில் ஸே இந்திப் படத்தில் கொண்டாடப்பட்டார். ஆனாலும் கர்வப்படவில்லை. 2008ல் ஸ்லம் டாக் மில்லியனருக்கு இசையமைத்து உலக அரங்கில் ஜெய் ஹோ என கொடி கட்டிப் பறந்தார். ஆனால், ஆஸ்கார் வாங்கிய பின் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே ' என்றல்லவா சொன்னார்? இப்பவோ, ஆஸ்கார் பரிசளிப்பு விழாவிலேயே அவரது இசைதான்!

ஐயா, `நாம் சாதித்தது சிறிது, போதாது,’ என நினைத்து விட்டால் தொடர் வெற்றிதான். சாணக்கியர் அதைத்தானே சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x