Last Updated : 16 Apr, 2018 10:34 AM

 

Published : 16 Apr 2018 10:34 AM
Last Updated : 16 Apr 2018 10:34 AM

சபாஷ் சாணக்கிய: சேர்த்துச் சேர்த்து வைத்து

எனது நண்பர் ஒருவர். பெயரா? வேறு யார்? குமார்தான்! குமாரின் 17 வயதிலேயே அவரது தந்தை காலமாகி விட்டார். ஏழ்மையான குடும்பம்.

அவர் தந்தை விட்டுச் சென்றது எல்லாம் கடன்தான். ஆனால் அவர் அஞ்சாமல், அசராமல் உழைத்தார். தனது பரம்பரைத் தொழிலான பஞ்சு வணிகத்தில் இறங்கினார். பெரும் பொருள் ஈட்டினார். குமாருக்குச் சதா சர்வ காலமும் லாபம்தான் சிந்தனை. பணத்தைச் சேர்த்து தொழிலில் போடணும். முதலில் தந்தையின் கடனைத் தீர்த்தவர், பின்னர் சிறுகச் சிறுகத் தொழிலைப் பெருக்கினார். முதலில் 10 லட்ச ரூபாய் இலக்காக இருந்தது, பின்னர் 20 லட்சமாகியது. அதுவும் சாத்தியமான பின்னர் 50 லட்சம், கோடி என உயர்ந்து கொண்டே போனது. ஆமாம், இடையில் ஒரு புண்ணியவதியைக் கல்யாணம் செய்து கொண்டார். இரு பெண் குழந்தைகள். ஆனால் குடும்பத்தில் எதற்கும் பணத்தைச் சாதாரணமாகச் செலவு செய்து விட மாட்டார்.

எதில் பணம் போடுவதென்றாலும் முதலில் அதற்கான வட்டிக் கணக்கைப் பார்ப்பார். போராடிப் போராடி அவரை ஒரு நல்ல வீடு வாங்க வைத்து விட்டார் அவர் மனைவி. ஆனால் குமார் தன் குடும்பத்தினரை அதில் குடியிருக்க விடவில்லை. குறைந்த வாடகையில் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்து விட்டு புதிதாய் வாங்கிய வீட்டிற்கு மாறிப் போவது அவரது பார்வையில் முட்டாள்தனம். புது வீட்டிற்குக் கிடைக்கக் கூடிய அதிக வாடகை கிடைக்காமல் போய் விடுமில்லையா? வீட்டை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தாலும், அதில் 3 லட்சத்திற்கு மரவேலைகள் செய்ய வைப்பதற்குள் மனைவிக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

குமாருக்கு அதனால் எவ்வளவு வாடகை கூடும் என்பதுதான் கணக்கே தவிர, மரவேலைகள் செய்தால்தான் நிறைவாக, பயனுள்ளதாக இருக்கும் என்பது இல்லை. ஒரு கோடி செலவு செய்த இடத்தில் 3 லட்சத்தைப் பார்க்கக் கூடாது என்பதும் அவரிடம் எடுபடாது. இந்த நகை விஷயத்திலோ அவரிடம் போராடிப் போராடி நொந்து விட்டார் அவரது மனைவி. 10 லட்ச ரூபாய் வைர நெக்லஸை விடுங்கள். ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் விலையிலான தங்க நெக்லஸ் என்றாலும் குமாரிடம் பெயராது. அவர் கணக்கே தனி. நெக்லஸை ஆண்டுக்கு எத்தனை முறை போடுவாய் என மனைவியைக் கேட்பார். அதாவது மனைவியின் வாழ்நாளில், மொத்தமே 15, 20 சந்தர்ப்பங்களில் மட்டும் உபயோகப்படுவதால் ஒரு முறைக்கு (?) ரூ 10,000 செலவு என்றெல்லாம் கணக்கிடுபவரை என்ன சொல்வது? `மக்கள் பொருட்களையோ சேவைகளையோ வாங்குவதில்லை. அவர்கள் திருப்தியைத்தான் வாங்குகிறார்கள்’ என்று சொல்கிறார் பிலிப் கோட்லர் எனும் அமெரிக்கப் பேராசிரியர். நாம் எதற்கும் கொடுக்கும் விலை அதில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை, திருப்தியைப் பொறுத்தது எனும் இந்த உண்மையை அறியாதவர் பாவம் அந்தக் குமார். இவ்வளவு ஏன்? அவர் வீட்டுப் பணிப்பெண் சீசனுக்குத் தகுந்த மாதிரி தவறாமல் மல்லிகை, கனகாம்பரம், டிசம்பர் பூ என வாங்கி வைத்துக் கொள்வார்.

குமாரோ , மனைவியை அதிலும் கெடுபிடி செய்வார். திரைப்படங்களுக்குச் செல்வது, சுற்றுலா போவது, தர்மம் செய்வது என வருமானம் குறைவானவர்கள் கூடத் தத்தம் தகுதிக்கேற்ப செலவழிக்கும் பொழுது குமாரைப் பொறுத்தவரை எதற்கும் அளவுகோல் பணமே தவிர, மனித உணர்வுகள் அல்ல! `பிழைப்புக்கான அக்கப்போரில் வாழ்வைத் தொலைத்து விடக் கூடாது’ என ஜான் வுடன் எனும் அமெரிக்கக் கூடைப் பந்துப் பயிற்சியாளர் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை? பின்னர் குமாரின் மகள்களும் கல்யாணமாகிச் சென்று விட்டனர். ஆனால் குமாரின் உடல் நிலை சர்க்கரை வியாதியாலும், ரத்தக் கொதிப்பினாலும் 52 வயதிலேயே பாதிக்கப்பட்டு விட்டது. கல்லீரல் சரிவர செயல்படவில்லை. செலவழிக்க பணம் இருந்தது. ஆனால் உடல் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாதே. எப்படியோ உயிர் வாழ்ந்தாலும், குமாருக்கு பணம் சம்பாதித்தோமே தவிர அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனத் தெரிந்தது. ஆனால் காலம் கடந்த பின், புரிந்து என்ன பலன்? `தேங்கிய நீரை வடியவிட்டுப் பின்னர் நீரைத் தேக்குவது போல, நாம் சேர்த்த செல்வத்தையும் அவ்வப்போது செலவழித்துக் கொண்டேதான் சேர்க்க வேண்டும்' என்கிறார் சாணக்கியர். அண்ணே, சும்மா சேர்த்து வைத்தால், தண்ணீர் கெட்டுத்தான் போகும். பயன்படாது. பணமும் அப்படித்தான்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை சம்பாதிப்பதும் சேர்ப்பதுமே வேலை, பின்னர் அடுத்த கட்டத்தில் செலவழிக்கலாம், தர்மம் செய்யலாம் எனும் கொள்கை தவறல்லவா? தகுதிக்கேற்ற விகிதாச்சாரத்தில் இவை நான்கையுமே அவ்வப்போது செய்து விடுவது தானே நல்லது ?

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x