Published : 02 Apr 2018 10:49 AM
Last Updated : 02 Apr 2018 10:49 AM

ஜெனரல் மோட்டார்ஸ்: இந்திய விற்பனையில் நஷ்டம், ஏற்றுமதியிலோ லாபம்!

மெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வெற்றி பெறவில்லை. இதனால் இந்திய விற்பனையை நிறுத்தும் முடிவை கடந்த ஆண்டு எடுத்துவிட்டது.

இந்தியாவில் விற்பனையை நிறுத்திவிட்டு வெறுமனே இங்கிருந்து ஏற்றுமதிகளில் ஈடுபடலாம் என்ற ஜெனரல் மோட்டார்ஸின் உத்தி, அந்நிறுவனத்தை லாபப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியை 1996-ம் ஆண்டு தொடங்கியது ஜெனரல் மோட்டார்ஸ். மகாராஷ்டிர மாநிலம் தலேகான் பகுதியில் ஒரு ஆலையும், குஜராத் மாநிலம் ஹலோல் எனுமிடத்தில் ஒரு ஆலையையும் அமைத்தது. இவ்விரு நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.87 லட்சம் கார்களாகும்.

2015-ம் ஆண்டில் இந்நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 51,839, அடுத்து 2016-ம் ஆண்டில் இது 32,540- ஆகக் குறைந்தது. 2017-ல் 25,823-ஆகக் குறைந்தபோதுதான் உள்நாட்டு விற்பனையை நிறுத்தும் முடிவை மேற்கொண்டது ஜெனரல் மோட்டார்ஸ். இந்தியாவில் விற்பனையான கார் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு ஒரு சதவீதத்துக்கும் கீழாக குறைந்தபோதுதான் இனியும் இங்கு தொடர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தது. இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததில் இந்நிறுவனம் எதிர்கொண்ட ஒட்டுமொத்த நஷ்டம் 8,000 கோடி ரூபாயாகும்.

இரண்டு ஆலையில் ஒன்றை விற்கும் முடிவை எடுத்தது. அதன்படி குஜராத் மாநிலம் ஹலோல் ஆலையை சீனாவைச் சேர்ந்த எஸ்ஏஐசி நிறுவனத்துக்கு விற்பனை செய்து. தற்போது மகாராஷ்டிர மாநில ஆலையில் மட்டும்தான் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் இங்கு உற்பத்தியாகும் வாகனங்கள் ஏற்றுமதி மட்டுமே செய்யப்படுகின்றன. 2015-ம் ஆண்டில் 2,011 ஆக இருந்த ஏற்றுமதி 2016-ல் 37,082 ஆக அதிகரித்தது. 2017-ம் ஆண்டில் 70,969 ஆக உயர்ந்தது. 2018 பிப்ரவரி வரையான காலத்தில் ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கை 76,644 ஆகும்.

ஏற்றுமதி அதிகரித்ததைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டில் இங்குள்ள ஊழியர்களுக்கு 100 சதவீத போனஸ் அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஹலோல் ஆலையை விற்றதன் மூலம் கிடைத்த தொகை, இந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடு அளிக்கவும், ஓரளவு கடன் சுமையைக் குறைக்கவும் இந்நிறுவனம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்தால் ஜெனரல் மோட்டார்ஸை போல உள்நாட்டில் விற்பனையில் தவிக்கும் நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x