Published : 09 Apr 2018 11:18 am

Updated : 09 Apr 2018 11:18 am

 

Published : 09 Apr 2018 11:18 AM
Last Updated : 09 Apr 2018 11:18 AM

பிட்காயின் தடை தாமதமான நடவடிக்கையா?

பிட்காயின் உள்ளிட்ட எல்லா வகையான கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கும் தடை விதித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த டிசம்பர் மாதம் கிரிப்டோ கரன்சிகளை பொன்சி திட்டங்களோடு ஒப்பிட்டு மத்திய அரசு கருத்து தெரிவித்தது. அதன்பின் மத்திய நிதி அமைச்சகம் கிரிப்டோ கரன்சிகளின் விலை நிர்ணயம் வெறும் ஊகத்தின் அடிப்படையில் நடைபெறுவதாகவும் இதற்கு எந்த வரையறைகளும் கிடையாது என்று சொன்னது.

இதன் உச்சமாக பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் சட்டத்துக்கு புறம்பானவை என அறிவித்தார். பிப்ரவரி-1 அன்று நிகழ்ந்த இந்த அறிவிப்புக்குப் பின் இரண்டு மாதங்கள் கழித்து கிரிப்டோ கரன்சிகளைத் தடை செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி.


கிரிப்டோ கரன்சிகளின் மூலம் பண மோசடி நிகழும் வாய்ப்பு அதிகம், சந்தையின் ஒருங்கமைந்த தன்மையை முறைப்படுத்தப்படாத நாணயங்கள் அழிக்கின்றன, நுகர்வோருக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளது என பல காரணங்களை அடுக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்தக் காரணங்கள் சரியானவை என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் ஏற்கெனவே சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட ஒரு விர்ச்சுவல் கரன்சியை தடை செய்வதற்கு ஒரு அரசாங்கம் இரண்டு மாத காலம் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தப் பிரச்சினையில் போதிய அக்கறையை இந்தியா எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

இந்த விவகாரம் குறித்து ஆரம்பம் முதலே எந்த முடிவையும் எடுக்காமல் குழப்பமான மனநிலையிலேயே அரசு இருந்து வந்தது. இந்தியா இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே சீனா, வங்காள தேசம், தென் கொரியா, இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகள் பிட்காயினுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சில கட்டுப்பாடுகளுடன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா அனுமதியும் கொடுக்காமல், தடையும் விதிக்காமல் மதில் மேல் பூனையாகவே இவ்வளவு காலம் இருந்துவிட்டு இப்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

50 லட்சம் இந்தியர்கள் சுமார் 200 கோடி டாலர் அளவுக்கு பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட்காயினில் அதிக தொகையை முதலீடு செய்திருக்கும் சிலரை வருமான வரித்துறை வரி கட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரிசர்வ் வங்கி உத்தரவுகள்படி பிட்காயின் முதலீடுகளை ரூபாயாக மாற்றமுடியாதென்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். கிரிப்டோ கரன்சி தடையின் மூலம் பிட்காயின்களை முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் வருமான வரியை செலுத்துவதற்காக எத்தகைய வழிமுறைகளை முதலீட்டாளர்கள் கடைபிடிக்கப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பணமதிப்பு நீக்கம் செய்தபின்னும் கருப்புச் சந்தையில் பணப்புழக்கம் குறையாத நிலையில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை தடை செய்வதால் மட்டும் சிக்கல்கள் குறைந்துவிடுமா என்று கிரிப்டோகரன்சித் துறையில் புதிதாக தொழில் தொடங்கியவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் தகவல்களைத் திரட்டுதல், சிக்கல்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பையே சிதைப்பது சரியாகாது என்ற கிரிப்டோ கரன்சி தொழில் முனைவோர் வாதத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x