Last Updated : 23 Apr, 2018 10:08 AM

 

Published : 23 Apr 2018 10:08 AM
Last Updated : 23 Apr 2018 10:08 AM

சபாஷ் சாணக்கியா: உலகை ஆள... நாக்கை ஆளணும்!

ந்தியாவில் உள்ள கைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? அக்டோபர் 2017 வரை சுமார் 95 கோடியைத் தாண்டி விட்டதாம். பின்னே என்னங்க? சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் அடுத்தபடியாக பெரும்பாலான மனிதர்கள் செய்வது இந்தப் பேச்சு பேசுவது தானே? கண்ணாடியில் பார்த்துப்பார்த்துத் தன்னைத் தானே ரசித்துக் கொள்ளும் `தன்னை வியந்தவர்கள்’ ஒரு வகை என்றால், மற்றவர்களைப் பிடித்து வைத்து, எதை எதையாவது பேசிப் பேசி மகிழ்ந்து கொள்பவர்கள் வேறு ஒரு வகை!

பேச்சு எமக்குத் தொழில் என்று இருக்கும் சொற்பொழிவாளர்களையும், பேசியே ஆக வேண்டிய வழக்கறிஞர்களையும், பேசிப் பேசிப் புரிய வைக்க வேண்டிய ஆசிரியர்களையும் , பேசிப் பிழைத்துக் கொள்ள வேண்டிய அரசியல்வாதிகளையும் பற்றி நாம் பேச வேண்டாம்.

இவர்களில் திறமைசாலிகள் தமது நாவன்மையால் சொல்ல வந்த கருத்துகளை அழகாகச் சுவைபட எடுத்துக் கூறி தமது பணியில் வெற்றி காண்பார்கள். இவர்களிடம் சரக்கு இருக்கும். அத்துடன் பேச வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் நான் சொல்ல வந்தது மற்றவர்களைப் பற்றி.

நாம் எதற்காகப் பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எவ்வளவு பேசுகிறாம் என்கிற கவலையில்லாமல் சும்மா பேசிக் கொட்டுபவர்கள் பலர். யோசிக்காமல் பேசினால், அதிகமாகப் பேசினால் அது தவறாகப் போக வாய்ப்புகள் அதிகமாகும் இல்லையா? அதனால் தான் `அன்பாகப் பேசு, பணிவாகப் பேசு..’ என்றெல்லாம் பலவாறாக அறிவுறுத்திய இராமலிங்க அடிகளார் இறுதியாகப் , `பேசாதிருந்தும் பழகு' என்றார். வள்ளுவரோ ஒரு படி மேலே போய் `நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று’ என்றே சொல்லி விட்டார். எனது அலுவலகத்தில் ஒரு சகபணியாளர். அவருக்கு மற்றவர்களைப் பற்றிக் குறை பேசுவது மிகவும் பிடித்தமான விஷயம். அவர் பெயரா? உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்? குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

குமாருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். அதுவும் யாரைப் பற்றியும் அவர்கள் இல்லாத பொழுது குறை சொல்வது மிகமிகப் பிடிக்கும். நாம் நம் வேலையில் தீவிரமாக இருந்தாலும் விட மாட்டார்.

மெல்ல நம் அருகில் வந்து நல்லவர் போல பேச்சைத் தொடங்குவார். `இந்த கோபால் என்ன ஒரு நாளைக்கு ஒரு புது சட்டை போடுகிறான்’ என்பார். நாம் அப்படியா என்று சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டால் போதும், பிடித்துக் கொண்டு விடுவார். அப்புறம் என்ன.கோபாலின் நேர்மையை, அவரது நடத்தையை, கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்த்திக் கொண்டே போவார். என்னவோ தெரியவில்லை. தமது சகபணியாளர்களை, போட்டியாளர்களை யாரேனும் குறை கூறிப் பேசினால், அதைக் கேட்பதில் ஒரு தனி ஆனந்தம் சிலருக்கு. பொதுவாகவே பெண்களின் நடத்தைப் பற்றியும், ஆண்களின் நேர்மை பற்றியும் தவறாகப் பேசுவது குமார் போன்றவர்களின் பொழுதுபோக்கு.

`உயர்ந்த எண்ணமுடையவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள், சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பார்கள்.ஆனால் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களோ மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்’ என கிரேக்க அறிஞர் சாக்ரடீஸை சொல்லியது இன்றும் நடப்பது தானே. ஆனால் இப்படிப் பேசுபவர்களை எல்லோரும் நம்பிவிட மாட்டார்கள். உண்மையில் இது மற்றவர்களைத் தவறாகப் பேசும் குமார் போன்றவர்களின் குணத்தைத் தான் அடையாளம் காட்டும்!

`பிறரைப்பற்றி மோசமாகப் பேசுவது என்பது, நம்மைப்பற்றி நாமே உயர்வாகச் சொல்லிக் கொள்வதற்கான நேர்மையற்ற ஒரு வழிதான். மற்றவரைக் குறை கூறாதிருப்பது நல்ல செயல் மட்டுமல்ல, கெட்டிக்காரத்தனமும் அதுதான்’ என்கிறார் வில் டியூரண்ட் எனும் அமெரிக்க வரலாற்றாளர்.

நீங்களே சொல்லுங்கள். மற்றவர்கள் குறையைப் பற்றிக் கேட்டுச் சிறிது நேரம் வேண்டுமானால் குளிர் காயலாம். ஆனால் அவ்வாறு குறை பேசுபவர்களை யாரும் உளமார மதிப்பார்களா ? அவர்களிடம் மற்ற திறமைகள் இருந்தாலும், மற்ற நல்ல குணங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இந்த ஒரு கெட்ட பழக்கத்தினால் அடிபட்டுப் போகும் இல்லையா?

ஐயா, ஒருவரது பேச்சையும் வைத்துத் தானே அவரை மற்றவர்கள் எடை போடுவார்கள்? தோற்றமும் உடையும் உதவுவது சிறிது தான், சிறிது நேரம்தான். ஒருவரது படிப்பும் பண்பாடும் வெளிப்பட உதவியாக, வடிகாலாக இருப்பது அவரது பேச்சுத் தானே?

அமைதியாக , குறைவாகப் பேசுபவர்கள் தானே மதிக்கப்படுவார்கள். மற்றவர்களைப் புறங் கூறாமல் இருப்பது நல்ல பேச்சுக்கு அவசியம் அல்லவா?

`ஒருவர் இந்த உலகை வெல்ல நினைத்தால், அதற்கு ஒன்று அவசியம். அவர் மற்றவர்களை அவதூறு பேசத் துடிக்கும் நாக்கை அடக்கி வைக்க வேண்டும்' என்கிறார் சாணக்கியர். உண்மை தானே?

நம்மைச் சுற்றி உள்ளவர்களை வெற்றி பெற, முதலில் நாம் நமது நாக்கை அடக்கி வெற்றி பெற வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x