Published : 09 Apr 2018 11:16 AM
Last Updated : 09 Apr 2018 11:16 AM

சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டும் யமஹா ஆலை

 

ட்டோமொபைல் துறையே இப்போது சூழல் பாதுகாப்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புகை மாசைக் கட்டுப்படுத்த அரசு புகைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கடுமையாக்கி வருகிறது. பாரத் 5-ம் நிலை தவிர்த்து அடுத்தகட்டமாக பாரத் நிலை 6-ஐ நிறுவனங்கள் 2020-ம் ஆண்டிலிருந்து பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.

சூழல் பாதுகாப்பில் அரசு நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் செயல்பட்டுவரும் யமஹா மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலை முன்னோடியாகத் திகழ்கிறது. நிறுவனத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஆற்றல் மூலம் பெறும் நடவடிக்கையை இது செயல்படுத்தி வருகிறது.

ஆலையின் மேற்கூரையில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை நிறுவி 1,100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே 350 கிலோவாட் மின்சாரத்தை சூரிய ஆற்றலிலிருந்து பெறுகிறது. தற்போது இந்த ஆலையில் சூரிய மின்னுற்பத்தி 1,450 கிலோவாட்டாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை 3500 கிலோவாட்டாக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆலையின் உதிரி பாக தயாரிப்பு பகுதிகளான பாடி ஷாப், இன்ஜின் பகுதி, பணியாளர் பஸ் நிறுத்தும் பகுதி, ஊழியர்கள் அலுவலகத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல நிழல் தர அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை ஆகியவை அனைத்திலும் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிதாக சூரிய மின்னுற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு 1,600 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது. மஹிந்திரா சுஸ்டென் நிறுவனத்துடன் இணைந்து ரூ. 5 கோடி செலவில் சூரிய மின்னுற்பத்தி ஆலையை யமஹா நிறுவியுள்ளது.

இது தொடர்பாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் ரியூஜி க்வாஷிமா கூறியதாவது: மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்த வேண்டியது தற்போது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் பசுமை சூழ் உலகை உருவாக்க முடியும். மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நிறுவனத்தின் கடமையாகும். சூரிய மின்னுற்பத்தி மூலம் ஆலைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மூலம் சூழல் பாதுகாக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள யமஹா ஆலைகளில் மிகக் குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியிடும் ஆலையாக சென்னை ஒரகடம் ஆலை திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு 190 கிலோவாட் மற்றும் 140 கிலோவாட் சூரிய மின்னுற்பத்தி பலகைகளை உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களின் மேற்கூரைகளில் இந்நிறுவனம் அமைத்தது. இந்த ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேறாத வகையில் சூழல் பாதுகாப்பு ஆலையாக உருவாக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு உட்பட அனைத்து பணிகளும் சூரிய மின்னாற்றல் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்ஜீவ் பால் கூறியது: இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள யமஹா நிறுவனம், தொழில்துறையில் நடைபெறும் வளர்ச்சி மாற்றங்களுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது. அதேசமயம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் தங்களுக்குள்ள பொறுப்பையும் உணர்ந்து செயல்படுகிறது. ஆலையில் சூரிய மின்னுற்பத்தி பலகைகளை அமைப்பதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் குறையும். இது சூழல் பாதுகாப்பில் ஸ்திரமான மேம்பாட்டை எட்ட உதவும் என்றார்.

சூழல் பாதுகாப்புக்கேற்ற வாகனங்களை உற்பத்தி செய்யும் அதேநேரத்தில் சூரிய மின்னுற்பத்தியை ஆலையில் நிறுவி பிற ஆலைகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது யமஹா சென்னை ஆலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x