Published : 04 Mar 2024 06:10 AM
Last Updated : 04 Mar 2024 06:10 AM

சறுக்கல்கள் தவிர்க்க முடியாதவை! - பிஎன்சி மோட்டார்ஸ் இணை நிறுவனர் & சிஇஓ அனிருத் நாராயணன் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 12

மின்வாகனங்களை நோக்கிய நகர்வு உலக அளவில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் தற்போது, டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தொடங்கி, ஏதர், ஓலா புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என 300-க்கும்மேற்பட்ட மின்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய போட்டிச் சூழல் மிகுந்த துறையில், 2019-ம் ஆண்டு களமிறங்கியது பிஎன்சி மோட்டார்ஸ் (BNC Motors).

கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் பிஎன்சி, 110 சிசி இருசக்கர பிரிவில் கவனம் செலுத்துகிறது. பிஎன்சியை தொடங்கும்போது அனிருத் நாராயணனுக்கு வயது 31. அமெரிக்க மெக்கின்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நல்ல வேலை, நல்ல வருமானம் என்று வாழ்க்கை சென்றுகொண்டிருந்தாலும், அவருள் தொழில்முனைவுச் சிந்தனை தீவிரம்கொண்டிருந்தது. “என்ன ஆகிவிடப் போகிறது. களம் இறங்கிப் பார்ப்போம்” என்று வேலையை விட்டுவிட்டு நண்பரோடு இணைந்து பிஎன்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.

சேவைத் துறையுடன் ஒப்பிடுகையில், உற்பத்தித் துறையில் ஸ்டார்ட்அப் தொடங்கி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது சவால் மிகுந்தது. இப்படியான ஒரு சூழலில், தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டில் ரூ.400 கோடி மதிப்பு மிக்க நிறுவனமாக பிஎன்சியை அவர் வளர்த்தெடுத்தார். அனிருத் நாராயணனின் தொழில்முனைவு கதை என்ன? உரையாடினேன்...

நீங்கள் பள்ளி முடித்ததும் கல்லூரி படிப்புக்கு அமெரிக்கா சென்றுவிட்டீர்கள். எப்படி இந்த வாய்ப்பு அமைந்தது? - அப்பா, அம்மா இருவரும் வேலை நிமித்தம் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு வந்தவர்கள். இதனால் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். அப்பா ஒரு பொறியாளர்.

சொந்தம க ஆட்டோமோட்டிவ் சார்ந்து சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நான் தினமும் பள்ளி முடித்து விட்டு அங்கு செல்வது வழக்கம். அங்கு புதிய புதிய மின் மற்றும் மின்னணு சாதன தயாரிப்புகள் இருக்கும். இதனால் சிறு வயதிலேயே பொறியியல் படிப்பில் எனக்கு தீவிர ஆர்வம் உருவாகிவிட்டது.

என் ஆர்வத்துக்கு ஏற்ற வகையில் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். இந்தியாவைவிடவும் வெளிநாட்டில் படித்தால், உலக அனுபவம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் என்னை அமெரிக்காவில் சேர்த்தனர்.

மேல்நடுத்தர வர்க்க குடும்பம். அதனால், அப்போது பணம் பெரிய பிரச்சினையாக இல்லை. ஆனால், விதி விளையாடியது. நான் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற சமயத்தில், என்னுடைய அப்பாவின் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இனி என்னுடைய படிப்புச் செலவுக்கும் தனிப்பட்ட செலவுக்கும் வீட்டை எதிர்பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். நான்கு ஆண்டு படிப்பை இரண்டரை ஆண்டுகளில் முடித்தால் கல்விக் கட்டணம் மிச்சமாகும்.

அமெரிக்க கல்வி முறையில் இதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால், தீவிரமாக படித்து, இரண்டரை ஆண்டுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். இது தவிர்த்து, ஜூனியர் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். என்னுடைய உழைப்பிலேயே படித்துமுடித்து வெளிவந்தேன்.

எப்போது தொழில்முனைவுப் பயணம் தொடங்கியது? - கல்லூரி முடித்த பிறகு கலிஃபோர்னியாவில் பொறியியல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. எனக்கு பொறியியல் நன்றாக வரும். இதனால், விற்பனை பிரிவில் அனுபவம் பெற விரும்பினேன்.

காரணம், குறிப்பிட்ட காலம் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு அந்த அனுபவத்தைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. சக ஊழியர்கள் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஏனென்றால், அந்நிறுவனத்தில் பொறியியலை விடவும் விற்பனைப் பிரிவுக்கு ஊதியம் குறைவு.

ஆனால், எனக்கு நான் செல்ல வேண்டிய பாதை குறித்து தீர்க்கமான முடிவு இருந்தது. இதனால், நான் ஊதியம் குறித்து கவலைப்படவில்லை. போயிங், நாசா போன்றவைதான் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

அவர்களிடம் எங்கள் தயாரிப்பைப் பற்றி பேசி, அவற்றை வாங்கச் செய்ய வேண்டும். அவர்களிடம் தயாரிப்பை விற்பது எளிதல்ல. எனினும், அதை வெற்றிகரமாக செய்தேன். இதன்மூலம் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

இதனால், 2013-ல் வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்த நான், கையில் இருந்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து internet of things சார்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். ஆனால், நிறுவனம் நான் நினைத்த அளவில் செல்லவில்லை. நஷ்டம் ஏற்பட்டது.

நிர்வாகம் சார்ந்து எனக்கு கூடுதல் அனுபவம் தேவை என்பதை உணர்ந்தேன். அமெரிக்காவில் எம்பிஏ-வுக்கு விண்ணப்பித்தேன். யேல் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

எம்பிஏ முடித்த பிறகு, பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இதனால், மெக்கின்சி நிறுவனத்தில் இணைந்தேன். பெரிய நிறுவனங்களுக்கு ஆய்வின் அடிப்படையில் ஆலோசனை வழங்குவதுதான் அங்கு எனக்கு வேலை. இதனிடையே எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந் திருந்தனர்.

நல்ல வேலை, நல்ல ஊதியம் என்று வாழ்க்கை சென்றுகொண்டிருந்தாலும் தொழில்முனைவு எண்ணத்திலிருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை. அந்த சமயத்தில், எங்கள் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளருக்காக, இந்தியாவின் மின்வாகனச் சந்தை குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. அப்போது எனக்கு சில விஷயங்கள் புலப்பட்டன. அந்த சமயத்தில், பெரும்பாலான இந்திய மின்வாகன நிறுவனங்கள் சொந்தமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை (ஆர்&டி) கொண்டிருக்கவில்லை.

மாறாக அவை சீனாவின் தயாரிப்புகளை ரீபிராண்டிங் செய்து கொண்டிருந்தன. ஒருசில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே சொந்ததயாரிப்பை மேற்கொண்டு வந்தன. ஆனால், அவற்றின் விலை அதிகமாக இருந்தது.

இந்நிலையில், சொந்தமாக ஆர்&டி கட்டமைப்பைக் கொண்டு, குறைந்த விலையில், மக்களின் தொழில்பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இ-ஸ்கூட்டரை தயாரிக்கலாம் என்ற ஐடியா எனக்கு உதயமானது. கோயம்புத்தூரில் இருந்த என்னுடைய குடும்ப நண்பர் வினோத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினேன்.

தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால், தயாரிப்பு முதல் விநியோகம் வரை ஆழ்ந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நல்ல அனுபவம் இருந்தது. இருவரும் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம். மெக்கின்சி வேலையை விட்டுவிட்டு, இந்தியா திரும்பி 2019 டிசம்பரில் பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

அதே காலகட்டத்தில், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மின்வாகனத் தயாரிப்பில் களம் இறங்கின. ஒரு பக்கம், முன்னணி நிறுவனங்கள்; இன்னொரு பக்கம் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள். இந்தப் போட்டிச் சூழலை எதிர்கொள்ள என்ன வியூகம் வகுத்தீர்கள்? - பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு தயாரிப்பை சந்தைக்குக் கொண்டுவர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். நாங்கள் விரைவாக எங்கள் தயாரிப்பை சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டோம்.

இதனால், எங்கள் வாகனங்களை ரேபிட் புரோட்டோடைப்பிங் (Rapid Prototyping) முறையில் மேற்கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் தயாரிக்க இருந்த வாகனத்தின் புரோட்டோடைப் மாடலை உருவாக்கி குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களிடம் அதைக் காண்பித்து அவர்களின் தேவையைப் புரிந்து அதற்கு ஏற்ப வாகனத்தின் இறுதி வடிவமைப்பை உருவாக்கினோம். இந்த அணுகுமுறையால் எங்களால் ஒரு சில மாதங்களிலே தயாரிப்பை உருவாக்க முடிந்தது.

உங்கள் ஸ்டார்ட்அப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் எது, அதை எப்படி கடந்து வந்தீர்கள்? - எங்களது முதல் மாடலில் வெளிநிறுவனம் ஒன்றின் பேட்டரியை பயன்படுத்தி இருந்தோம். வாடிக்கையாளர் ஒருவர், அந்த
வாகனத்துக்கு வீட்டில் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தபோது வாகனம் திடீரென்று தீப்பற்றியது. பேட்டரி காரணமாக தீப்பற்றியதாக செய்தி பரவியது. இது எங்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில், வெவ்வேறு நிறுவனங்களின் மின்வாகனங்கள் தீப்பற்றும் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. அந்தப் பட்டியலில் எங்கள் நிறுவனமும் இணைந்தது எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. விபத்து நடந்த வாடிக்கையாளரின் வீட்டில் ஆய்வு செய்தபோதுதான் எங்களுக்குத் தெரியவந்தது, பேட்டரி கோளாறு காரணமாக எங்கள் வாகனம் தீப்பற்றவில்லை. மாறாக, வாடிக்கையாளரின் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

எனினும், நாங்கள் பயன்படுத்திய பேட்டரி நிறுவனத்தின் தயாரிப்பு நடைமுறையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அப்படி ஆய்வு செய்தபோது, அந்நிறுவனத்தின் தயாரிப்பு முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இந்தியாவின் டாப் 5 பேட்டரி நிறுவனங்களில் ஒன்று அது. இனி நாம் பேட்டரிக்கு வெளிநிறுவனத்தை நாட வேண்டாம். சொந்தமாக பேட்டரியை உருவாக்குவோம் என்று முடிவு செய்தோம்.

அதுவரை எங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி வைத்தோம். பேட்டரி உருவாக்கம் என்பது மிகவும் கடினமான செயல்பாடு. இதனால், எங்கள் வெளியீடு ஒரு ஆண்டு தள்ளிப்போனது. எனினும், எங்கள் சொந்த பேட்டரியின் வழியே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தோம்.

தொழில்முனைவில் சறுக்கல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். தொழில்முனைவு என்றாலே, எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். எந்தத் தடங்கலைக் கண்டும் பின்வாங்கி விடக்கூடாது. குன்றா ஊக்கத்துடன் முன்னகர்ந்து செல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x