Published : 05 Feb 2024 06:10 AM
Last Updated : 05 Feb 2024 06:10 AM

டீ கடை ரூ.150 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய கதை - ‘சாய் கிங்ஸ்’ நிறுவனர்கள் ஜஹபர் சாதிக், பாலாஜி சடகோபன் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 10

டீ கடை மூலம் ஆண்டுக்கு ரூ.45 கோடி வருவாய் ஈட்ட முடியுமா? ஸ்டார்ட்அப் அணுகுமுறை வழியே நிச்சயம் முடியும். சாய் கிங்ஸ் அதற்கு ஒரு உதாரணம். ஜஹபர் சாதிக், பாலாஜி சடகோபன் இருவரும் நண்பர்கள். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள். ஒரு நாள், “வழக்கமான டீ கடைகள் ஆண்களுக்கானதாக இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நவீன டீ கடையை நாம் உருவாக்கலாமே!” என்று அவர்களுக்குத் தோன்றியது. இருவரும் இணைந்து 2016-ம் ஆண்டு, கீழ்ப்பாக்கத்தில் சாய் கிங்ஸின் முதல் டீ கடையைத் தொடங்கினர்.

தமிழ்நாட்டின் முதல் டீ ஸ்டார்ட்அப் நிறுவனமாக சாய் கிங்ஸ் அடையாளப்படுத்தப்படுகிறது. வழக்கமான டீ கடைகளுக்கும் சாய் கிங்ஸ் போன்ற டீ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குமான அடிப்படை வித்தியாசம், டீ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் கடைகளை பிராண்டாக முன்வைக்கின்றன. அதன் வழியே அவை நாடு முழுவதும் கிளை பரப்பும் சாத்தியத்தைப் பெறுகின்றன.

இன்று சாய் கிங்ஸ் சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 57 கடைகளைக் கொண்டு ஆண்டுக்கு ரூ.45 கோடி வருவாய் ஈட்டுகிறது.

இந்த வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் கதை என்ன? உரையாடினேன்…

இருவரும் ஐடி துறையில் நல்ல ஊதியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள். எந்தப் புள்ளியில் தொழில்
முனைவில் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தீர்கள்? -
ஜஹபர் சாதிக் (தலைமை நிர்வாக அதிகாரி): அடிப்படை யில் நான் மிகுந்த தயக்க சுபாவம் உடையவன். பள்ளி கல்லூரியில் நான் இருக்கும் இடமே தெரியாது. கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைகிடைத்தது. அங்கு என்னைப் போல் வேலைக்குச் சேர்ந்தவன்தான் பாலாஜி. இருவரும் நல்ல நண்பர்களானோம்.

ஒருகட்டத்தில், பாலாஜி என்னிடம் வந்து, “டேய், சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்குவோமா” என்று கேட்டான். “தொழில் குறித்து நம் இருவருக்கும் எந்த அனுபவமும் புரிதலும் கிடையாது. தவிர, இப்போதுதான் குடும்பம் பொருளாதாரரீதியாக மேம்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் ஏன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டும்” என்று திட்டத்தை கலைத்துவிட்டேன். அவ்வப்போது பாலாஜி தொழில்முனைவு ஐடியாவை முன்வைப்பதும் நான் அதைக் கலைத்துவிடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால், வேலைக்குச் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் மனதளவில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. “ஓரளவு சம்பாதித்துவிட்டோம். ஒரு முயற்சியாக தொழில் தொடங்கிப் பார்ப்போம். சிக்கலாகிவிட்டால் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவோம்” என்று இருவரும் முடிவு செய்தோம்.

நேரடியாக புதிய நிறுவனம் ஆரம்பிப்பதற்குப் பதிலாகபிரான்ஸைஸ் எடுத்து நடத்தலாம் என்று திட்டமிட்டோம். 2012-ம் ஆண்டு பிரான்ஸைஸ் உரிமை வாங்கி, பெரம்பூரில் ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ சலூன் ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை, நல்ல வருவாய் கிடைத்தது. இதனால், இருவரும் வேலையைவிட்டுவிட்டு முழு நேரமாக சலூனை கவனிக்க ஆரம்பித்தோம். இப்படியாகவே, எங்களது தொழில்முனைவு பயணம் தொடங்கியது.

‘சாய் கிங்ஸ்’ ஐடியா எப்போது உருவானது? - பாலாஜி சடகோபன் (தலைமைச் செயல்பாட்டு அதிகாரி): சலூனைத் தொடந்து ‘சப்வே’ உணவகத்தின் பிரான்ஸைஸ் உரிமைப் பெற்று நடத்த ஆரம்பித்தோம். பிரான்ஸைஸைப் பொருத்தவரையில், ரிஸ்க் குறைவு. அதேசமயம், உங்களுக்கு பெரிய அளவில் சுதந்திரம் இருக்காது. நீங்கள் கடையில் சிறு மாற்றத்தைக்கூட கொண்டு வரமுடியாது.

ஒரு கட்டத்தில் எங்களுக்குத் தோன்றியது: “நமக்கு தொழில் சார்ந்து அனுபவம் கிடைத்துவிட்டது. ஏன் இன்னும் இன்னொரு நிறுவனத்தின் கடைகளை நாம் பிரான்ஸைஸ் எடுத்து நடத்த வேண்டும். நாமே ஏன் சொந்தமாக ஒரு பிராண்டை உருவாக்கக்கூடாது?” ஒரு நாள் நள்ளிரவில் நானும் ஜஹபரும் டீ குடித்துக் கொண்டிருந்தோம்.

பேச்சுவாக்கில் அவனிடம் நான் கேட் டேன், “நாம் டீ கடை ஆரம்பிக்கலாமா? தற்போது டீ கடை என்பது திறந்த வெளியில் இருக்கிறது. குறிப்பாக, அது ஆண்களுக்கான இடமாகவே உள்ளது. பெண்கள் தனியாக டீ குடிக்கச் செல்லும் சூழல் இல்லை. குடும்பத்தோடு வந்தாலும், டீ குடிப்பதற்கு பலரும் டீ கடைக்குச் செல்வதில்லை.

ஓட்டலுக்குச் சென்றே டீ குடிக்கின்றனர். ஆக, நாம் அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு டீ கடையை உருவாக்கலாமே” என்றேன். உடனே இது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபடத்தொடங்கிவிட்டோம். அந்த சமயத்தில்தான், பெங்களூருவில் சாய் பாய்ண்ட், டெல்லியில் சாயோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிரபலமடைந்திருந்தன. சென்னைக்கு ஏற்ற வகையில் அப்படி ஒன்றை ஆரம்பிப்போம் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘சாய் கிங்ஸ்’.

தமிழ்நாட்டில் டீ கடைகளுக்கு பஞ்சமே இல்லை. திரும்பியஇடமெங்கும் டீ கடைகள்தான். இந்தப் போட்டிச் சூழலை எதிர்கொள்ள என்ன வியூகம் வகுத்தீர்கள்? - ஜஹபர்: நாங்கள் சாய் கிங்ஸ் ஆரம்பிக்க இருந்த சமயத்தில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் டீ கடைகள் இருந்தன. அப்போது எங்கள் முன்னால் இருந்த ஒரே கேள்வி, இந்தக் கடைகளிலிருந்து நாம் எந்தெந்த வகைகளில் வேறுபட்டு இருக்கப்போகிறோம்? பெரும்பாலும், வழக்கமான டீ கடைகளில் ஒரே வகையான டீதான் கிடைத்தது.

இதனால், நாங்கள் பல வகையான டீக்களை வழங்க திட்டமிட்டோம். வழமையான டீ கடைக்கும்எங்களுக்குமான வேறுபாட்டை கடையின் வடிவமைப்பின் மூலம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். பயன்பாட்டுக்கும் பார்ப்பதற்கும் கடை எளிமையாகவும் அதே சமயம் எலைட்டாகவும் இருக்க வேண்டும். அமர்ந்து நிதானமாக டீ குடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இதற்கேற்ப, கடையின் சுவர், உணவு அட்டவணை, மேஜை, நாற்காலி ஆகியவற்றை வடிவமைத்தோம். பணியாளர்களுக்கு சீருடை வழங்கி கடையை புரோபெஷனலாக மாற்றினோம். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்க் அறிமுகப்படுத்தினோம். அதுவரையில் தமிழ்நாட்டில் பார்சல் டீ என்றால், பிளாஸ்டிக் பையில் கட்டிக் கொடுப்பார்கள் இல்லையென்றால், வீட்டிலிருந்து பிளாஸ்க் எடுத்து வந்து வாங்க வேண்டும்.

இந்தச் சூழலில், எங்களுடைய ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்க் கவனம் ஈர்த்தது. அதில் 45 நிமிடங்கள் வரை டீ சூடாக இருக்கும்.அதுவரையில், தமிழ்நாட்டில் இத்தகைய மாடலில் டீ கடை கிடையாது. இந்த விஷயங்களெல்லாம் எங்களை மற்ற டீ கடைகளிலிருந்து தனித்துவப்படுத்திக் காட்டியது.

குறிப்பாக, ஐடி ஊழியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நீங்கள் சாதாரணமாக டீ கடை திறந்தாலே அங்கு நேரடி விற்பனை நடந்துவிடும். ஆனால், ஆன்லைன் விற்பனையில் தடம்பதிப்பதுதான் சவால். ஸ்விக்கி, சோமேட்டா வருகைக்குப் பிறகு எங்கள் நிறுவனம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கியக் காரணம் எங்களது, டிஸ்போசபிள் பிளாஸ்க்தான். சொல்லப்போனல், இன்று சாய் கிங்ஸின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் ஆன்லைன்தான்.

சலூன், டீ கடை தொழில்களில் கால்பதிக்கப் போகிறீர்கள் என்று சொன்னபோனது உங்கள் வீட்டில் அதை எப்படி எதிர்கொண்டார்கள்? - பாலாஜி: நாங்கள் எந்தத் தொழிலையும் மேல், கீழ் என்று பார்க்கவில்லை. அந்தத் தொழிலில் உள்ள பொருளாதார வாய்ப்புகளை மட்டுமே அலசினோம். ஆனால், எங்கள் இருவர் வீட்டிலும், எங்கள் தொழிலுக்கு ஆரம்பத்தில் ஆட்சேபனை இருந்தது. என் அப்பா கேட்டார், “ஐடியில் நல்ல சம்பாதிக்கிற. ஏன் சலூன் திறக்கப்போற?” நாங்கள் ‘சாய் கிங்ஸ்’ ஆரம்பிக்கப் போகிறோம் என்று நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவர் “டீ கடைதான ஆரம்பிக்கப் போகிறீர்கள்” என்று இளக்கார தொனியில் சொன்னார்.

இன்று சாய் கிங்ஸ் ரூ.150 கோடி மதிப்புமிக்க ஒரு டீ ஸ்டார்ட் அப். எங்கள் வெற்றி வழியாகவே இத்தொழில் குறித்து அவர்கள் கொண்டுள்ள பார்வையை மாற்றி அமைத்தோம். தற்போது எல்லா துறைகளும் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் வழியே நிறைய புதிய வாய்ப்புகள் வருகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நம்முடைய பழைய மனக்கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும்.

தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்று எதைச் சொல்வீர்கள்? - பாலாஜி: நம்முடைய இலக்கு என்ன என்பதில் தெளிவு வேண்டும். தொழில் தொடங்கி பணம் சம்பாதிப்பதா அல்லது பணம் சம்பாதிப்பதுடன் அர்த்தப்பூர்வமாக தொழிலை முன்னெடுத்துச் செல்வதா? சாய் கிங்ஸைப் பொருத்தவரையில் அதை பெரிய பிராண்டாக உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்ள பிராண்டிங் மிகவும் அவசியம். சாய் கிங்ஸ் ஒரு பிராண்டாக மாறாவிட்டால், இன்று
அது வழமையான ஒரு டீ கடையாகத்தான் இருந்திருக்கும். தொழில்முனைவுக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைப் பயணத்திலும் நம் இலக்கு குறித்து தெளிவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லையா!

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x