Published : 05 Feb 2018 11:37 AM
Last Updated : 05 Feb 2018 11:37 AM

வால்மார்ட்டுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட்

ந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மளிகைப் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட உள்ளது. ஆனால் மளிகைப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலீடு, இந்தியா போன்ற நாடுகளில் அதிக ரிஸ்க்கானது என்பது யதார்த்தம். பிக்பாஸ்கட் போன்ற மளிகைப் பொருட்கள் இ-காம் நிறுவனங்களால்கூட இந்த துறையில் குறிப்பிடத்தக்க சந்தையை பிடிக்க முடியவில்லை. ஆனால் புதிய வழிகளில் தனது ஆட்டத்தை தொடங்க உள்ளது பிளிப்கார்ட்.

பிக்பாக்ஸ்கட்டில் சீனாவின் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளதைப் போல, பிளிப்கார்டில் அமெரிக்காவின் வால்மார்ட் முதலீடு செய்ய உள்ளது. உலக அளவில் நேரடி வர்த்தகத்தில் மிகப் பெரிய சில்லரை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அதிக கொள்முதல் செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஏற்கெனவே 20 இடங்களில் நேரடி விற்பனையில் உள்ளது.

வால்மார்ட்டின் முதலீட்டைப் பெறுவதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் மளிகை சந்தையில் துணிந்து இறங்கும். இதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை வால்மார்ட் கையகப்படுத்த உள்ளது. வால்மார்ட்டின் கூட்டணிக்கு பின்னர் இந்தியாவில் மளிகைப் பொருட்கள் ஆன்லைன் சந்தையை தீவிரப்படுத்தவும் பிளிப்கார்ட் திட்டம் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஆறு நகரங்களில் மளிகை பொருட்கள் விற்பனைக்கான சேகரிப்பு மையத்தை உருவாக்கவும், ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டம் வைத்துள்ளது.

சர்வதேச அளவில் ஆன்லைன் வர்த் தக நிறுவனங்களின் வெற்றிக்கு முக் கிய காரணமாக இருப்பது மளிகை பொருட்களின் விற்பனைதான். அமே சான் அமெரிக்காவில் இதில் பல முயற்சிகளை செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப இ-காம் நிறுவனங்களுக்கு வருகின்றனர். இந்தியாவில் இ-காம் துறை வளர்ந்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வருவது குறைவாக உள்ளது. இதற்கு காரணம் தினசரி மளிகை பொருட்கள் விற்கும் முயற்சிகள் குறைவு என்பதுதான். அந்த முயற்சியில் பிளிப்கார்ட் இறங்க உள்ளது. இதற்காகவே பிளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் கூட்டுசேர உள்ளது. இதன் மூலம் வால்மார்ட் கொள்முதல் செய்யும் தினசரி மளிகை பொருட்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

இன்னொரு பக்கம், ஆன்லைன் விற்பனையில் மிகப் பெரிய நிறுவனமான அமேசான் அமெரிக்காவில் நேரடி விற்பனையிலும் இறங்கிவிட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஆளில்லா சூப்பர் மார்கெட்டுகளை உருவாக்கி புதுமையாக ஈர்க்கிறது. இதை உலகம் முழுக்க கொண்டு செல்ல உள்ளது. இதனால் வால்மார்ட் போன்ற நேரடி விற்பனையகங்களுக்கு போட்டி உருவாகும். அதே நேரத்தில் சில்லரை வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் வால்மார்ட் ஆன்லைன் சந்தையுடன் கூட்டணி வைக்கிறது. இந்தியாவில் 2021-ம் ஆண்டுக்குள் 50 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

அமேசான் நேரடி விற்பனையில் அதிரடி காட்ட உள்ளது என்றால், பிளிப்கார்ட் ஆன்லைன் மளிகை விற்பனையில் அதிரடி காட்ட உள்ளது. ஆனால் வால்மார்ட் போன்ற ஏகபோக நிறுவனங்களின் வாலைப் பிடிப்பது பிளிப்கார்ட்டுக்கு ஏற்றம் தருமா ? வால்மார்ட்க்கு வரவேற்பு தரும் செயலா ? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x