

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பூர்வகுடிகள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வுக் கலாசாரம், சுரண்டல், நோய்கள், பொருளாதார வளர்ச்சியின் மீதான அதீத மோகம் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதிலும் இருக்கும் பல பூர்வகுடி இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன.
அவற்றில் ஒன்றுதான் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனங்கள். வெள்ளையர்களால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளான அந்தப் பூர்வகுடி இனங்களின் அழிவு குறித்து சமீபத்தில் ஒரு புத்தகம் வந்துள்ளது. உலகெங்கும் பூர்வகுடிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த தருணத்தில், அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
தேசிய மன்னிப்பு வரலாறு
ஆஸ்திரேலியாவில் 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மே 26-ம் தேதி ‘தேசிய மன்னிப்பு தினம்' அனுசரிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் வரலாற்றின் மாபெரும் ‘தவறு' அடங்கியிருக்கிறது.
ஆஸ்திரேலியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது ஒரு கண்டம். அங்கு வெள்ளையர் வருகைக்கு முன்னால் 3 லட்சம் முதல் 8 லட்சம்வரையிலான எண்ணிக்கையில் பூர்வகுடி மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பூர்வகுடிகளுடன் வெள்ளையர்கள் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பால், பல்வேறு பூர்வகுடி இன மக்கள் வேகமாக உயிரிழந்தனர். இப்படியே விட்டால், ஒரு கட்டத்தில் பல பூர்வகுடி இனங்கள் அற்றுப்போய்விடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று உணர்ந்த ஆஸ்திரேலிய அரசு, ஒரு திட்டத்தைத் தீட்டியது.
பிரிக்கப்பட்ட குழந்தைகள்
பூர்வகுடிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களிடமிருந்துப் பிரித்து, குழந்தையில்லாத வெள்ளையர்களுக்குத் தத்துக்கொடுக்கப்பட்டன.
அவ்வாறு தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தைகள் பலவும், வெள்ளையர்களின் வீடுகளில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்வரை, உண்மையான தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தேட எந்த முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது.
இந்தத் திட்டம் ஆஸ்திரேலியாவில் ஒரு சட்டமாகவே இருந்துவந்தது. தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தில் ஒட்டவும் முடியாமல், வெள்ளையர் சமுதாயத்தில் ஒடுக்குதலுக்கு ஆளாகி, உண்மை தெரிந்த பிறகு தங்களுடைய வேர்களைக் கண்டுபிடிக்கவும் முடியாமல், இரு தாய், இரு தந்தை, இரு கலாசாரம், இரு அடையாளம் என மிகக் குழப்பமான ஒரு தலைமுறை 1910-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டுவரை வாழ்ந்துவந்தது.
காணாமல் போன தலைமுறை
இந்தத் தலைமுறையை ஆஸ்திரேலியாவில் ‘திருடப்பட்ட தலைமுறை’ (ஸ்டோலன் ஜெனரேஷன்)' என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த ‘திருடப்பட்ட தலைமுறை’ குறித்து அலி கோப்பி எக்கர்மான் எனும் பெண் கவிஞர் ‘Too Afraid to Cry' எனும் புத்தகத்தை எழுதி, சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இந்தப் புத்தகம் 'நவயானா' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன், 1880-ம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்களால் பூர்வகுடிகள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ‘ரூபி மூன்லைட்' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் 2013-ம் ஆண்டுக்கான ‘நியூ சவுத் வேல்ஸ் பிரிமீயர்ஸ்' இலக்கிய விருதை வென்றது.
இவருடைய புதிய புத்தகம், நாவலாகவும் அல்லாமல், கவிதைகளாகவும் அல்லாமல், நாட்குறிப்புகள் போல உரைநடையும் கவிதைகளும் கலந்த ஒரு படைப்பாகத் திகழ்கிறது. இதை எழுதிய நூலாசிரியரும் ‘திருடப்பட்ட தலைமுறை'யில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு எதிர் முனைகள்
இந்தப் புத்தகத்தின் ஆரம்பமே, ஏழு வயதுச் சிறுமியை, அவள் தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர் ஒருவர் பாலியல்ரீதியாக வன்கொடுமை புரிவதில்தான் தொடங்குகிறது.
அவள் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது குடும்பத்தை நினைத்துக் கவலைகொள்கிறாள். பள்ளியில் அவளின் நிறம் குறித்துக் கேலிக்கு உள்ளாகிறாள். சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். இவற்றுக்கு இடையேயும், பூர்வகுடிகளுக்கே உரித்தான இயற்கை மீதான நேசத்தை அவள் இழந்துவிட வில்லை. ஓரிடத்தில் பறவைகள் குறித்து அவள் கவிதை ஒன்றை எழுதுகிறாள். அது இப்படி இருந்தது:
பறவைகளின் பாடல் இல்லையெனில்
வாழ்க்கை சுவடற்றுப் போகும்
கனவுப் பறவைகள்
அதிகாலையில் வருகின்றன
தூதுப் பறவைகள்
ஜன்னலைத் தட்டுகின்றன
காவல் பறவைகள்
வானத்தில் வட்டமடிக்கின்றன
நட்புப் பறவைகள்
நமக்கு அருகில் அமர்கின்றன
பறவைகளின் பாடல்களால்
எனது காதுகள் நிரம்பட்டும்
நான் உயிர் வாழக் கூடும்...