Published : 30 Sep 2013 04:04 PM
Last Updated : 30 Sep 2013 04:04 PM

பூமி

பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற ஆங்கில, ஜெர்மன் சொல் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ), ஜெர்மனில் எர்டே (erde).

சூரியக் குடும்பத்தில், ஏன் இந்தப் பால்வெளி மண்டலத்திலேயே பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது. இதுவரை மிக அதிகமாக ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ள செவ்வாய் கோள் உட்பட, வேறெங்கும் உயிர் வாழ்வதற்கான சூழலோ, ஏன் தண்ணீரோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியக் குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் பூமி. சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஐந்தாவது பெரிய கோள். பூமியின் சுற்றளவு, வெள்ளியைவிடச் சில நூறு கிலோமீட்டர்கள் அதிகமானது. சூரியன் ஒரு பெரிய கதவின் அளவுக்கு இருக்கிறது என்று கற்பனை செய்துகொண்டால், பூமி ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்.

பூமி பாறைகளால் ஆன கோள். இது தரைப்பகுதியைக் கொண்ட கோள் என்றும் அழைக்கப்படுகிறது. மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனத் திடமான, பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. தரைப்பகுதியைக் கொண்டுள்ள மற்ற கோள்களில் இருந்து பூமி முக்கியமாக மாறுபடும் விஷயம், அது கடல்களால் சூழப்பட்ட கோள் என்பதுதான். பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதம் கடல் சூழ்ந்திருக்கிறது.

பூமியில் உயிர்கள் இருப்பது மட்டுமில்லாமல், பன்முகத் தன்மையும் செழித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது வளிமண்டலம் என்ற மெல்லிய படலம்.

பூமியின் வளிமண்டலம் 78 சதவிகித நைட்ரஜன், 21 சதவிகித ஆக்சிஜன், 1 சதவிகிதம் மற்ற வேதி வாயுக்களால் நிரம்பியுள்ளது. இந்தச் சமநிலை நாம் சுவாசிப்பதற்கும், வாழ்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும்கூட, பூமியைப் போல சுவாசிக்கக்கூடிய வாயுக்களைக் கொண்டதாக வேறு எந்தக் கோளும் இல்லை.

வளிமண்டலத்தில் நீராவியின் இருப்பும், பரவலும்தான் பூமியின் தட்பவெப்பநிலையைத் தீர்மானிக்கின்றன. நீண்டகாலப் பருவகால நிலை, குறுகியகால உள்ளூர்த் தட்பவெப்பநிலை போன்றவற்றிலும் வளிமண்டலம் தாக்கம் செலுத்துகிறது.

மேலும் இந்த வளிமண்டலம், ஒரு பாதுகாப்புப் படலம் போலவும் செயல்படுகிறது. பூமிக்கு வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கிறது. எதுவுமற்ற வெற்றிடமான விண்வெளி மற்றும் கடுமையான குளிரில் இருந்து இந்தக் காற்றுப் பகுதிதான் பூமியைப் பாதுகாக்கிறது. நம்மை நோக்கி வரும் விண்கற்களில் இருந்து பாதுகாக்கிறது. பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் உரசும்போது தீப்பிடித்து எரிந்து தூள்தூளாகச் சிதறிவிடுகின்றன. இதனால் அவை பூமியின் தரைப்பகுதி மீது வந்து மோதுவதில்லை.

பூமி ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போலிருப்பதாலும், 23.45 டிகிரி சாய்ந்த அச்சில் இருப்பதாலும், அது சூரியனைச் சுற்றி வரும் காலத்துக்கு ஏற்ப பூமியில் பருவகாலங்கள் மாறுகின்றன. பூமி மீது சூரிய ஒளி படுவதன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. இதனால் ஆண்டின் ஒரே காலத்தில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம், தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் என எதிரெதிரான பருவ காலங்கள் நிகழ்கின்றன. எந்த அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்தோ அல்லது விலகியோ இருக்கிறது என்பதைப் பொறுத்து இது அமைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x